வரதட்சணை கேட்டு குடும்பத்துடன் கொடுமை செய்த கணவன்.. இளம் பெண் தற்கொலை.. சோக சம்பவம்!
Young Woman Killed Herself Over Dowry Harassment | வரதட்சணை கொடுமை காரணமாக பெண்கள் தற்கொலை செய்துக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் வரதட்சணை கேட்டு கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்த நிலையில், இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்ட பெண்
பெங்களூர், பிப்ரவரி 02 : கர்நாடகா (Karnataka) மாநிலம், ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகா, ஹுனசேகரே கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. 24 வயதான இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 20 வயதில் ஹாசன் தாலுகா, எச் மைலள்ளி கிராமத்தை சேர்ந்த சாமி என்பவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக அந்த பெண்ணின் பெற்றோர் 60 கிராம் தங்கம் மற்றும் ரூ.1.30 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், அந்த பெண் வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த கணவன் குடும்பத்தினர்
இந்திரா மற்றும் சாமி தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையே சாமியின் தாய் மற்றும் அவரது சகோதரி புட்டி, இந்திராவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், இந்திரா அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இதையும் படிங்க : லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கிய காவலர்.. குழந்தையை போல கதறி அழுத வீடியோ வைரல்!
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்
இந்திராவின் கணவர் சாமி பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளார். ஆனால், பேக்கரியில் வியாபாரம் இல்லாத நிலையில் கடையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன் பிறகு வருமானத்திற்காக கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையே கூலி வேலைக்கு செல்ல மனமில்லாத சாமி மீண்டும் தொழில் தொடங்க முயற்சி செய்துள்ளார். அதற்காக மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : வெளிநாட்டு பெண்ணிடம் 400 மீட்டருக்கு ரூ.18,000 கட்டணம் வசூலித்த டாக்ஸி டிரைவர்.. கைது செய்த மும்பை போலீஸ்!
விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட இந்திரா
இந்திராவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த சாமி, நாளடைவில் அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ஜனவரி 31, 2026 அன்று கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இந்திரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை கண்ட சாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இந்திராவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திராவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சாமி, அவரது தாய் மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.