AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலுக்காக தாயைக் கொன்ற மகள்…. ஓராண்டுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Daughter Murders Mother Over Love: தெலங்கானாவில் காதலுக்கு தடையாக இருந்த தாயை மகள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. உடலை வீட்டில் புதைத்து வைத்து காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து நாடகமாடினர். ஒரு ஆண்டுக்கு பின் ஸ்கூட்டர் விற்பனை முயற்சியால் உண்மை தெரியவந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

காதலுக்காக தாயைக் கொன்ற மகள்…. ஓராண்டுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
காதலுக்காக தாயைக் கொன்ற மகள்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 26 Mar 2026 18:45 PM IST

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவஹர் நகர் பகுதியில் நடந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு தடையாக இருந்த தாயை, மகள் தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை வீட்டின் படுக்கையறையில் புதைத்து வைத்து, காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து நாடகமாடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பின்னணி மற்றும் தாய் வாழ்க்கை போராட்டம்

கொலை செய்யப்பட்ட அஞ்சு என்பவர் குடும்ப பிரச்சினையால் கணவரை பிரிந்து, தனது இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி, தனது மகள்களை வளர்த்து வந்தார். இவரது மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், இளைய மகள் இஷிகா பிளஸ் டூ படித்து வந்தார்.

காதல் தொடர்பு மற்றும் தாய் எதிர்ப்பு

இஷிகாவுக்கு 2025 ஆம் ஆண்டு மவுந்தி என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டது. ஆனால், இஷிகா மைனராக இருந்ததால், இந்த உறவுக்கு தாய் அஞ்சு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தனது மகளுக்கு காதல் தொல்லை அளிக்கிறார் என்று கூறி போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மவுந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலைக்கான திட்டம் மற்றும் செயல்

இதனால் தாயின் மீது கடும் கோபமடைந்த இஷிகா, தாய் உயிரோடு இருக்கும் வரை தனது காதல் நிறைவேறாது என்று முடிவு செய்தார். இதனால் காதலன் மவுந்தியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த ஆண்டு மே மாதம் இரவு, அஞ்சு தூங்கிக் கொண்டிருந்தபோது மவுந்தியை வீட்டிற்கு அழைத்து வந்து, இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

உடலை மறைத்த முறையும் நாடகமும்

கொலை செய்த பின்னர், அஞ்சுவின் உடலை வீட்டின் படுக்கையறையில் உள்ள டைல்ஸ் கற்களை அகற்றி குழி தோண்டி புதைத்து, மீண்டும் டைல்ஸ் பதித்து மறைத்தனர். பின்னர், தாயை காணவில்லை என்றும், அவர் பயன்படுத்திய ஸ்கூட்டரும் காணவில்லை என்றும் போலீசில் புகார் அளித்து நாடகமாடினார் இஷிகா. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடியபோதும், அஞ்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு பின் வெளிச்சம் கண்ட உண்மை

இந்த நிலையில், அஞ்சுவின் ஸ்கூட்டரை மறைத்து வைத்து, அதை விற்பனை செய்ய முயன்றது இந்த வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்கூட்டர் ஆர்.சி பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் இஷிகாவை பிடித்து விசாரணை செய்தபோது, நடந்த அனைத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

கைது மற்றும் சட்ட நடவடிக்கை

இதனை தொடர்ந்து, இஷிகா மற்றும் அவரது காதலன் மவுந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு ஆண்டுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் மதிப்பையும், இளைஞர்களின் தவறான முடிவுகளின் ஆபத்தையும் மீண்டும் உணர்த்தியுள்ளது.

Follow Us