நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? இன்று தேர்தல்.. முடிவு எப்போது?
Vice President Election: துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து செப்டம்பர் 9, 2025 தேதியான இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, செப்டம்பர் 9, 2025: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று, அதாவது செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெற உள்ளது. நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசமைப்பு பதவி என்பது துணை ஜனாதிபதி பதவியாகும். இதற்கு முன்னதாக, துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், 2025 ஜூலை 21 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அளித்தார். அதனைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக துணை ஜனாதிபதி பதவி காலியாக இருந்து வருகிறது. மேலும், இந்தத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தரப்பில் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
துணை ஜனாதிபதி வேட்பாளர்கள்:
அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாஜக தரப்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி பாஜக தரப்பில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசப்பட்டது.
ஆனால், சி. பி. ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால், வேறு வேட்பாளரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். 2025 ஆகஸ்ட் மாதத்தில் இருவருமே வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் பின்னர் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டி கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர்.
மேலும் படிக்க: மழை வெள்ளத்தில் மூழ்கிய 300 கார்கள்.. மாருதி சுசுகி நிறுவனத்திற்கு பேரிழப்பு!
துணை ஜனாதிபதி தேர்தல் – யாருக்கு அதிக வாய்ப்பு?
துணை ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். நாடாளுமன்றத்தின் மக்களவையில் மொத்தமாக 542 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல் மாநிலங்களவையில் 228 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர, மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்களும் உள்ளனர். எனவே மொத்தம் 782 உறுப்பினர்கள் இன்று இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கேரளாவை அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. உஷார் மக்களே!
துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மொத்தமாக 392 வாக்குகள் பெற வேண்டும். அந்த வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்தால் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக வாக்குகள் உள்ளன. மொத்தமாக 442 உறுப்பினர்கள் பாஜக கூட்டணியில் இருக்கின்றனர். இதன் காரணமாக இன்று, அதாவது செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இன்று மாலை வெளியாகும் முடிவுகள்:
செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் தேர்தல் ரகசிய வாக்குப்பதிவு முறையில் நடைபெறும். அதே சமயம் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 9, 2025 மாலை நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற அறிவிப்பு வெளியாகும்.