கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டிய டிரம்ப்.. விளக்கம் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா!
India Responds to Donald Trump's Threatening | இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
டெல்லி, ஆகஸ்ட் 05 : ரஷ்யாவிடம் (Russia) இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு மேலும் வரிகளை அதிகரிக்க போகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதற்கு இந்தியா பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியா மீதான டிரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவுக்கு மேலும் வரிகளை அதிகரிக்க போகிறேன் – டொனால்ட் டிரம்ப் மிரட்டல்
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ரஷ்ய பணத்திற்காக அதிக அளவில் கச்சா எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக தான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கனிசமான அளவில் உயர்த்தி இருக்கிறேன். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு மேலும் வரிகளை அதிகரிக்க போகிறேன் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையும் படிங்க : ஆபரேஷன் சிந்தூர் – தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தி.. வாரணாசியில் பிரதமர் மோடி உரை..
டிரம்ப் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
இந்தியாவுக்கு மேலும் வரிகளை விதிக்க உள்ளதாக டிரம்ப் கூறியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி கொள்கையை தன் தேசிய நலன் மற்றும் உலக சந்தையில் நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை. உக்ரைன் போர் தொடங்கிய போது இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பி விட்டனர்.
இதையும் படிங்க : நான் என்ன பேசணும்? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு பிரதமர் மோடி.. வெளியான அறிவிப்பு!
அந்த சூழலில் இந்தியாவுக்கு குறைந்த வாய்ப்புகள் இருந்தன எனவே ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது இந்திய நுகர்வோருக்கு மலிவான மற்றும் தடையற்ற விநியோகத்தை வழங்குவதற்கான முன்னுரிமை ஆகும். லாபம் ஈட்டும் உக்தி அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களே ரஷ்யாவிடம் வணிகம் செய்கின்றன. அவர்களுக்கு அப்படி செய்வது கட்டாயம் அல்ல. ஆனால் அவர்கள் லாபத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்பது தான் ஒரே வித்தியாசம். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன் அவர்கள் தங்கள் சொந்த நடத்தையை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.