திருட வந்த வீட்டில் தூங்கிய நபர்.. கையும் களவுமாக சிக்கிய திருடன்!
Thief Sleeps in Victim's House in Hyderabad | ஹைதராபாத்தில் சீனிவாச ராவ் என்ற நபர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், அதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்ற நபர் வீட்டில் இருந்த பொருட்களை திருடி விற்பனை செய்து மது குடித்துவிட்டு வீட்டிலேயே தூங்கி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத், ஜூலை 04 : ஹைதராபாத்தில் (Hyderabad) வீட்டில் திருட சென்ற நபர், அங்கேயே படுத்து தூங்கியதால் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களை திருடிய அந்த நபர், அவற்றை விற்று மது குடித்துவிட்டு மீண்டும் தான் திருடிய வீட்டிற்கே வந்து படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருட வந்த நபர் கையும், களவுமாக சிக்கியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருட வந்த வீட்டில் படுத்து தூங்கிய நபர்
ஆந்திர மாநிலம் விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை அறிந்த அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணா என்ற நபர், சீனிவாச ராவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள் திருடிய அவர் அவற்றைக் கடையில் விற்பனை செய்துள்ளார். பிறகு அதன் மூலம் கிடைத்த பணத்தில் மது வாங்கி ஆசை தீர குடித்துள்ளார். இந்த நிலையில், மது போதை தலைக்கேறிய அவர் தான் பொருட்களை திருடிய அதே வீட்டிற்கு மீண்டும் வந்து தூங்கியுள்ளார்.
இதற்கிடையே சீனிவாசரா வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட கதவு திறந்திருப்பதை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்த நிலையில் அவர் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளார். ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த சீனிவாச ராவுக்கு கிருஷ்ணா வீட்டுக்குள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.




கையும் களவுமாக கைது செய்த போலீசார்
இந்த நிலையில், உடனடியாக அவர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிருஷ்ணாவை எழுப்பி கைது செய்துள்ளனர். போலீஸார் கைது செய்த போதும் முழுவதும் மது போதையில் இருந்த கிருஷ்ணா, போலீஸ் வேனிலும் தூங்கி வழிந்துள்ளார். இதனை அடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், சிறையில் அடைத்து தீர்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.