தெருநாய்கள் விவகாரம்: இது எவ்வளவு தீவிரமான விஷயம் என்று தெரியாதா? உச்சநீதிமன்றம் சரமாரி
Stray Dogs Case: அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளுக்கு தீர்வாக அவைகளுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. இந்த வழக்கில் அனைத்து மாநிலங்களும் ஒரு தரப்பாக சேர்ந்து தங்களது பதிலை தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

தெருநாய்கள்
டெல்லி, அக்டோபர் 27: தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையில், எதற்காக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சிலர் தங்களுக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்; அப்படியென்றால், செய்திகளை படிப்பதில்லையா? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க உத்தரவு:
தெருநாய்கள் தொல்லை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, இப்பிரச்சினை தொடர்பாக தனித்தனியாக 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த வழக்கில், நாய்களின் அச்சுறுத்தலை சமாளிக்க, தலைநகரம் மற்றும் அதன் புறநகர்களில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்காக 8 வாரங்களில் காப்பகங்களை அமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
Also read: வட சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய அலர்ட்!
உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பரவலாக எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு கடந்த ஆக.22ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. அதற்கு பதிலாக, தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
விலங்கு ஆர்வலர்கள் மாநகராட்சிகளில் விண்ணப்பித்து தெரு நாய்களை தத்தெடுக்கலாம், ஆனால் அவை தெருவுக்கு திருப்பி அனுப்பப்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அதோடு, பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ள இதே போன்ற வழக்குகளை விசாரித்து, தெரு நாய்கள் குறித்து தேசிய கொள்கையை உருவாக்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நீதிபதிகள் விக்கிரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Also read: தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
எவ்வளவு தீவிரமான விஷயம் என்று தெரியாதா?
இதையடுத்து, இது எவ்வளவு தீவிரமான விஷயம் என்று உங்களுக்கு தெரியாதா? தெருநாய் கடி சம்பவம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்த போதிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களும் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.