Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெங்களூரு சோக சம்பவம்.. மாநில அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்..

RCB Victory stampede: 2025 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா 2025, ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என சொன்னதால் ரசிகர்கள் திரண்டனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு சோக சம்பவம்.. மாநில அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்..
கர்நாடகா உயர்நீதிமன்றம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Jun 2025 19:30 PM

கர்நாடகா, ஜூன் 5: பெங்களூருவில் ஐபிஎல் (IPL 2025) தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (Royal Challengers Bengaluru) அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடைபெற்ற நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகா அரசை மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்க செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2025, ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல மனுவை தாக்கல் செய்து அதன் மீது இன்று (ஜூன் 5, 2025) விசாரணை நடத்தியது. அப்போது பொறுப்பு தலைமை நீதிபதியான காமேஸ்வரராவ் கர்நாடக மாநில அரசை சரமாரியாக விமர்சித்தார். இதுபோன்று நிகழ்வு நடைபெறுவதற்கு முன் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் இருந்திருக்க வேண்டாமா?, கூட்டம் அதிகரிக்கும் நிலையில் ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் ஆகியோர் தயாராக இருந்திருக்க வேண்டாமா?, இவ்வளவு பேர் கூடுகிறார்கள் என்றால் அந்த கூட்டத்தை சமாளிக்க ஒரு திட்டம் இருக்க வேண்டாமா?, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்த மக்கள் கூட்டம்

அப்போது அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சஷிகரன் ஷெட்டி, இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,643 காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் தேவையான தண்ணீர் லாரிகள், மாநில மீட்பு படை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனாலும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 56 பேர் காயமடைந்தனர். மேலும் ஐந்து பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் என 11 பேர் உயிரிழந்தனர். 34,600 பேர் அமரக்கூடிய சின்னச்சாமி மைதானத்தில் 33 ஆயிரம் பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டுவது வழக்கம்.

ஆனால் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டரை லட்சம் பேர் வந்துள்ளனர். அதிகாலை 4 மணி முதல் பெங்களூருவுக்கு மக்கள் வந்த நிலையில் சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் அதிகமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சி பெங்களூரு அணி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறிய சஷிகரன் ஷெட்டி எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என கூறினார். அப்போது விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சியை நடத்தியது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மாநில அரசு பதிலளிக்க உத்தரவு


இதன் பின்னர் இந்த துயர சம்பவத்திற்கான காரணங்கள் என்ன, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2025 ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இப்படியான நிலையில் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற முன்னெடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.