இருமுடி கட்டி ஐயப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Sabarimala temple: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி சிறப்பு தரிசனம் செய்தார். கேரளா அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பலத்த பாதுகாப்புடன் அவர் பம்பையில் நீராடி, 18 படிகள் ஏறி ஐயப்பனை வழிபட்டார்.

திரௌபதி முர்மு
கேரளா, அக்டோபர் 22: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடிக்கட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனிடையே நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக கேரளா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அக்டோபர் 21ம் தேதி மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அவருக்கு கேரள மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணியளவில் ராஜ்பவனில் இருந்து சபரிமலை அடிவாரமான பம்பைக்கு புறப்பட்டார். காலை 9 மணிக்கு கோன்னி பிரமடம் உள்விளையாட்டு அரங்கில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிபேடில் ஹெலிகாப்டரின் எடை தாங்க முடியாமல் சக்கரங்கள் புதைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைவரும் ஒன்று கூடி ஹெலிகாப்டரை நகர்த்த உதவினர்.
இதன்பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக காரில் பம்பை நதிக்கரைக்கு சென்றடைந்தார். அங்கு பம்பை ஆற்றில் புனித நீராடிய பிறகு, அவர்கள் இருமுடி கட்டிய பைகளை வைத்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து அதை எடுத்துக்கொண்டு காலை 11.30 மணியளவில் சன்னிதானத்திற்கு திரௌபதி முர்முவும், அவருடன் வந்த அதிகாரிகளும் புனித யாத்திரை புறப்பட்டனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் சிறப்பு வாகனத்தில் சபரிமலை மேலே சென்றடைந்தார். அங்கு ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட கூர்க்கா வாகனத்தில் சன்னிதானத்தை அடைந்தார்.
Also Read: சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்.. பெறுவது எப்படி?
சன்னிதானம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, கொடிமர அடிவாரத்தில் தந்திரி கண்டர் மகேஷ் மோகனர் பூரண கும்ப மரியாதை அளித்தார். 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை அவர் மனம் குளிர தரிசனம் செய்தார். இந்த தரிசனத்திற்குப் பிறகு, சன்னிதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் திரௌபதி முர்முஓய்வெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றார். இன்று மாலை மீண்டும் திருவனந்தபுரம் திரும்பும் குடியரசுத் தலைவர், ஆளுநர் வழங்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
Also Read: சபரிமலைக்கு போறீங்களா? வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.. உடனே புக் பண்ணுங்க!
திரௌபதி முர்மு வருகையையொட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன
இதற்கிடையில், அவர் நாளை (அக்டோபர் 23) மாலை கோட்டயம் மற்றும் குமரகோமுக்கு செல்லவுள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாட்டு நேரங்களும் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.