Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India’s COVID-19 Surge: இந்தியாவில் அதிகரிக்கும் புதிய மாறுபாடு.. 6,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்!

New COVID-19 XFG Variant in India: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஜூன் 9, 2025 அன்று, 6491 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். புதிய XFG மாறுபாடு 163 பேரில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிக பாதிப்புகள் உள்ளன. சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

India’s COVID-19 Surge: இந்தியாவில் அதிகரிக்கும் புதிய மாறுபாடு.. 6,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்!
கொரோனா பரிசோதனைImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Jun 2025 20:46 PM

டெல்லி, ஜூன் 9: இந்தியாவில் கடந்த 20 நாட்களாக புதிய கொரோனா (Corona) தொற்றின் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. ஒவ்வொரு நாள் கடக்கும்போதும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2025 மே 22ம் தேதி இந்தியா (India) முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 257 ஆக மட்டுமே இருந்தநிலையில், 2025 ஜூன் 9ம் தேதியான இன்று மத்திய சுகாதார அமைச்சகம் (Ministry of Health) வெளியிட்ட தகவலின்படி, 6491 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 624 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

அதிகரிக்கும் புதிய மாறுபாடு:

இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கன்சார்டியம் (INSACOG) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இந்தியா முழுவதும் 163 பேர் XFG எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் எவ்வாறு மாறுகிறது என்பதை கண்காணிக்க இந்தியா முழுவதும் உள்ள 54 ஆய்வகங்களின் வலையமைப்பான INSACOG, பொது சுகாதார அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

XFG மாறுபாடு என்றால் என்ன..?

XFG என்பது SARS-CoV-2 வைரஸின் மறுசீரமைப்பு துணை மாறுபாடாகும். அதாவது, இது கனடாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட 2 முந்தைய மாறுபாடுகளின் கலவையாகும். அதன்படி, LF.7 LP.8.1.2 ஆகியவை இணைந்து XFG ஐ உருவாக்குகின்றன. ஒரு நபர் ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு வைரஸால் பாதிக்கப்படும்போது மறுசீரமைப்பு மாறுபாடுகள் வெளிப்படுகின்றன. கடந்த 2021ம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய ஓமிக்ரான் குடும்பத்தின் கீழ் XFG வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் XFG எங்கு அதிகளவில் காணப்படுகிறது..?


INSACOGன் சமீபத்திய தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான 89 XFG பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 16 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 11 பேரும், ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளன.

மனித செல்களில் ஒட்டிக்கொண்டு நுழைய உதவும் வைரஸின் ஒரு பகுதியான XFGயின் ஸ்பைக் புரதத்தில் ஒட்டிக்கொள்கிறது. எனவே, இதை இந்திய விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இந்த வைரஸ் மனித செல்களை பிணைக்கும் திறனை குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

மத்திய அமைச்சகம் எச்சரிக்கை:

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அதாவது 2025 ஜூன் 9ம் தேதி வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 6500 ஐ எட்ட உள்ளது. எனவே சுகாதார நிபுணர்கள் அனைத்து மக்களும் எச்சரிக்கையாக இருக்கவும், கொரோனாவிலிருந்து தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தவும் அறிவுறுத்துகின்றனர்.