“வாரம் 2 நாள் விடுமுறை வேண்டும்” நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. தனியார் வங்கி சேவை பாதிக்குமா?
Nation wide Bank employees strike today: இதுதொடர்பாக ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இன்று (ஜனவரி 27) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
டெல்லி, ஜனவரி 27: வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உடனடியாக அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஏற்கெனவே, தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று 4வது நாளாக வேலை நிறுத்தம் நடப்பதால், பணபரிவர்த்தனை சேவைகள் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போது வங்கிகள், ஒவ்வொரு மாதத்திலும் முதல், 3வது மற்றும் 5வது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக இயங்குகின்றன. இதை மாற்றி, அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி, வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
மேலும் படிங்க : பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்:
இதுதொடர்பாக கடந்த 2024 மார்ச் மாதம், 12வது இருதரப்பு ஒப்பந்தத்தை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக் கொண்டது. தற்போது இது மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், இந்நிலையில், 2 ஆண்டாகியும் வாரத்திற்கு 5 நாள் வேலை நாட்களாக அமல்படுத்தப்படாததை கண்டித்து ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (ஜனவரி 27) நாடு முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
பேச்சுவார்த்தைகள் தோல்வி:
இதுதொடர்பாக ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இன்று (ஜனவரி 27) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். ஏற்கனவே 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் திறக்கப்பட வேண்டுமென்பதால், இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
HDFC, AXIS, ICICI வங்கிகள் போராட்டத்தில் இல்லை:
அதே சமயம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களில் எச்டிஎப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) மற்றும் ஆக்சிஸ் (AXIS) போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் அங்கம் வகிக்காததால், அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது. யுபிஐ மற்றும் இணைய வங்கிச் சேவை உட்பட டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தொடர்ந்து செயல்படும். எனினும், பொதுத்துறை வங்கிகளில் ரொக்க டெபாசிட், ரொக்கம் எடுத்தல், காசோலை கிளியரிங் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.