Manipur : மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்.. இணைய சேவை நிறுத்தம், ஊரடங்கால் பொதுமக்கள் பாதிப்பு!
Manipur Clash Cause Serious Issue in The State | மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மோதல் முடிவுக்கு வந்து அங்கு அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதன் காரணமாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது.

மணிப்பூர், ஜூன் 09 : மணிப்பூரில் (Manipur) மீண்டும் வன்முறை வெடித்தன் காரணமாக அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மணிப்பூரில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் மோதல் வெடித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல் – இணைய சேவை துண்டிப்பு
மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில், வீடுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் சிறிய வகை விமானங்கள் மூலம் ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்ததால் கடும் பதற்றும் நீடித்து வந்தது.
இதன் காரணமாக, அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த பைரன்சிங் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக இணைய சேவைகள் முடக்கப்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு சில மாதங்கள் அமைதி நிலவியது.
அரம்பாய் தெங்கோல் குழுவின் கைதால் வெடித்த மோதல்
#Manipur. June 7, 2025.
Violent protests & gunfire erupt in Imphal after the arrest of Arambai Tenggol cadres from the Meitei community. Protests also continue in the border town of Moreh after the arrest of a Kuki accused in the murder of a Manipur Police officer. pic.twitter.com/t14eOjSh6O
— Tanushree Pandey (@TanushreePande) June 7, 2025
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக அமைதி நிலவி வந்த நிலையில், மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உட்பட ஆறு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வன்முறையை கையில் எடுத்துள்ளதால் அங்கு மிகப்பெரிய கலவரம் உருவாகியுள்ளது. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மெய்தி இன மக்கள் சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை எரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் நிலமை கட்டுப்பாட்டை மீறியுள்ளதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.