மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
Man Killed Wife and Two Daughters In Telangana | தெலங்கானாவை சேர்ந்த அசாருதீன் என்ற நபர், தனது மனைவி மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்ய மறுத்ததால், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
ஐதராபாத், ஏப்ரல் 04 : தெலங்கானா (Telangana) மாநிலம், அனுமகொண்டா மாவட்டம், பொன்னேலு கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நீச்சல் குளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிணமாக கிடந்த தாய் மற்றும் பிள்ளைகளுக்கு நீச்சல் தெரியும் என்பதும், அந்த நீச்சல் குளம் அவர்களுக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் மீது புகார் அளித்த பெண்ணின் தந்தை
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் நன்றாக இருந்த தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் உயிரிழந்தது தொடர்பாக மருகமன் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அசாருதீன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ததாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : நாடு முழுவதும் இன்று முதல் E20 பெட்ரோல் விற்பனை தொடக்கம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு




போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்த அசாருதீன்
இது குறித்து போலீசாரிடம் கூறியுள்ள அவர், நான் வரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே நீச்சல் குளம் அமைத்து பிழைப்பை நடத்துகிறேன். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற எனது மனைவி மூன்றாவதாக கர்ப்பமானார். எங்கே மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று நான் கருக்கலைப்பு செய்ய சொன்னேன். ஆனால், எனது மனைவி அதற்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் கடந்த ஒரு மாத காலமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையும் படிங்க : இந்தியாவில் நக்சல் இயக்கங்களின் காலம் முடிந்தது – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எவ்வளவு கூறியும் கேட்காததால் எனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி, ஏப்ரல் 01, 2026 அன்று மனைவி மற்றும் பிள்ளைகளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றேன். முதலில் மனைவியை நீரில் மூழ்கடித்து கொலை செய்தேன். பிறகு பிள்ளைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தேன். அவர்கள் இயற்கையாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்கள் என நம்ப வைக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதற்குள் எனது மாமனார் போலீசில் புகார் அளித்துவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.