அதிகரிக்கும் கொரோனா.. பெங்களூருவில் 9 மாத குழந்தைக்கு பாசிட்டிவ்.. தமிழகத்தில் நிலைமை என்ன?
Kerala Covid Cases : கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தேவையின்றி மக்கள் மருத்துவமனைக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளா, மே 23 : கேரளாவில் கொரோனா தொற்று (kerala covid cases) வேகமாக பரவுவதை அடுத்து, அம்மாநிலத்தில் முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 2025 மே மாதத்தில் மட்டும் இதுவரை 182 பேர் கொரோனா தொற்றால் (Covid cases) பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2025 மே மாதத்தில் இருந்தே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பரவி தீவிரம் அடைந்து வருகிறது. ஓமிக்ரான் துணை வகைகளான JN1 LF.7 மற்றும் NB.1.8 வைரஸ்கள் தான் பரவி வருவதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகத்தின்படி, 2025 ஏப்ரல் 27 முதல் மே 3ஆம் தேதி வரையிலான வாரத்தில் கொரோன தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்துள்ளது.
கேளராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 102-ல் இருந்து 133ஆக உயர்ந்துள்ளது. மேலும், தாய்லாந்தில் 2024 மே 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 33,030 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாங்காக்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 6,000 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், ஹாங்காங்கில் கொரோனா தொற்று மே மாதத்தில் 13.66 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசிய நாடுகளில் பரவும் கொரோனா தொற்றும், இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. மே மாதத்தில் இதுவரை கேரளாவில் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
இதில் கோட்டயத்தில் 57 பேருக்கும், எர்ணாகுளத்தில் 34 பேருக்கும், திருவனந்தபுரத்தில் 30 பேருக்கும் பதிவாகி உள்ளன. எனவே, கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில், “தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று வேகமாக பரவினால், நோயின் தீவிரம் குறைவாக இருக்கிறது.
இருப்பினும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். சளி, தொண்டை வலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கடுமையான நோய்கள் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது நல்லது. தேவையல்தவிர்க்க வேண்டும். அவ்வப்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது நல்லது. தற்போது பரவும் கொரோனா வகைகளின் தீவிரம் அதிகமாக இல்லை” என்று கூறினார்.
மற்ற மாநிலங்களின் நிலவரம்
இந்தியாவில் மொத்தம் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தை பொறுத்தவரை 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம், கர்நாடகாவில் 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மகாராஷ்ராவில் 44 பேரும், டெல்லியில் 3 பேரும், குஜராத்தில் 6 பேரும், ராஜஸ்தான், ஹரியானா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.