10 பேரை பலி கொண்ட கோர விபத்து…சம்பவ இடத்தில் கேட்ட மரண ஓலம்…பேருந்து ஓட்டுநர் பரபரப்பு தகவல்!
Lorry And Private Luxury Bus Accident Reason: கர்நாடக மாநிலத்தில் சொகுசு பேருந்து மீது கனரக லாரி மோதிய விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அந்த பேருந்தின் ஓட்டுநர் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

கர்நாடகா கொடூர விபத்து நிகழ்ந்தது எப்படி
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை ( டிசம்பர் 25 ) அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில், அந்த பேருந்து தீ பிடித்து 9 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஃரபீக் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இந்த விபத்து குறித்து ஓட்டுநர் ஃரபீக் கூறியதாவது: பெங்களூரில் இருந்து சிவமொக்காவுக்கு சென்று கொண்டிருந்த போது, ஹரியூர் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென பேருந்து மீது மோதி தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில்
இந்த விபத்தின் போது, தனியார் சொகுசு பேருந்தானது சுமார் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பேருந்தின் மீது லாரி மோதுவது போல் வந்ததை அறிந்து நான் பேருந்து கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக அருகில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தனியார் பேருந்து உரசியது. அப்போது, வேகத்தை கட்டுப்படுத்த முயன்ற நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்து முடிந்தது.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த கார்…அரசுப் பேருந்து மீது மோதல்…பறிபோன மூன்று உயிர்கள்!
கண்ணாடியில் தூக்கி வீசப்பட்ட நபர்
இந்த விபத்தின் போது, பேருந்தின் முன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த முகமது சாதிக் என்பவர் கண்ணாடி மீது தூக்கி வீசப்பட்டு வெளியே விழுந்து காயம் அடைந்தார். இந்த விபத்தில் பேருந்தின் கதவு மற்றும் ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்ததால், சில பயணிகள் பேருந்து உள்ளே மாட்டிக் கொண்டனர். அவர்கள் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். சில பயணிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து தப்பித்தனர்.
சம்பவ இடத்தில் கேட்ட மரண ஓலம்
பேருந்தின் உள்ளே மாட்டிக் கொண்ட பயணிகள் வலியால் அலறி துடித்தனர். அந்தப் பகுதி முழுவது அவர்களது அழுகூறல் கேட்டுக்கொண்டிருந்ததாக கூறினார். இந்த விபத்தில் தனியார் பேருந்தின் டீசல் கசிவு தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மேலும் படிக்க: ஆம்னி பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 10 பேர் உடல் கருகி பலி!!