இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா வைரஸ்.. 6,815 பேர் பாதிப்பு.. கேரளாவில் நிலைமை மோசம்!
India Covid Cases : நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 6,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது

டெல்லி, ஜூன் 10 : நாட்டில் கொரோனா பாதிப்பு (india covid cases) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, இதுவரை நாட்டில் 6,815 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 9ஆம் தேதியான நேற்று 6,491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (ஜூன் 10) புதிதாக 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்க உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 2,053 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மேற்கு வங்கத்தில் 747 பேரும், உத்தர பிரதேசத்தில் 225 பேரும், தமிழகத்தில் 207 பேரும், மகாராஷ்டிராவில் 613 பேரும், கர்நாடகாவில் 553 பேரும், குஜராத்தில் 1109 பேரும், டெல்லியில் 691 பேரும், ஆந்திராவில் 89 பேரும், பீகாரில் 48 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6,815 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
மொத்தமாக 6,815 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஜனவரி மாதத்தில் இருந்து நாட்டில் 68 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, ஜார்க்கண்ட், மத்திய பிரதேச மாநிலத்தில் தலா ஒருவர் என மூன்று பேர் கொரோனா தொற்றால் உயிரிந்துள்ளனர். டெல்லியில் 7 பேரும், குஜராத்தில் 2 பேரும், கர்நாடகாவில் 9 பேரும், கேரளாவில் 15 பேரும், மத்திய பிரதேசத்தில் 2 பேரும், மகராஷ்ராவில் 18 பேரும், தமிழகத்தில் மூன்று பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தெரிகிறது.




புதிய வகை கொரோனா வைரஸ்
இந்தியாவில் இதுவரை 4 புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 தொடர்களைச் சேர்ந்தவை என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் XFG எனும் புதிய கொரோன மாதிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவண்ணம் உள்ளன. XFG என்பது கொரோனா வைரஸின் ஓமிக்ரானின் துணை மாறுபாடு என்பதாகும்.
இது முதல்முறையாக கனடாவில் கண்டறியப்பட்டதாகவும் இது தற்போது இந்தியாவில் பரவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற புதிய வகையான கொரோனா தொற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, கேரளா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும என கூறப்பட்டுள்ளது. அண்மையில், தமிழக்ததில் கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.