GST Reforms: ஜிஎஸ்டி சீர்திருத்தம்.. மக்கள் கையில் பணம் புழங்கும்.. நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!
Finance Minister Nirmala Sitharaman: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக, நுகர்வோர் செலவு அதிகரித்து, பொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் ஊட்டமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, விலைக் குறைவு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

சென்னை, செப்டம்பர் 20: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக மக்கள் கையில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதன்படி 2025 தீபாவளி மக்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கும் என அறிவித்தார். இதற்கிடையில் 2025 செப்டம்பர் முதல் வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு 2025, செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் மக்களின் அன்றாட தேவை பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தானிய வணிகர்கள் சங்கத்தின் 80வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய நிர்மலா சீதாராமன் புதிய ஜிஎஸ்டி வரி பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். அதன்படி, முன்பு நான்கு அடுக்குகளில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி தற்போது 2 அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்கள், நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பெருமளவில் பயனடைவதை உறுதி செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
Also Read: ஜிஎஸ்டியில் வந்த முக்கிய மாற்றம்.. அதிரடியாக விலை உயரும் பொருட்கள்.. பட்டியல் இதோ!
மேலும் முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால், உள்நாட்டு சந்தையில் வணிக நுகர்வு அதிகரிக்கும். அதேசமயம் மத்திய நிதி அமைச்சகம் பொதுமக்களிடமிருந்து ரூ.2 லட்சம் கோடியை வரிகளாகப் பெறாமல் அது உள்நாட்டு நுகர்வுக்கு உதவுவதற்காக பொருளாதாரத்திற்குள் திரும்பச் செல்லும். இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, ஒரு வாடிக்கையாளர் வழக்கமாக வாங்கும் ஒரு பொருளின் விலை குறைகிறது.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களிடையே அதிக செலவு ஏற்படும்போது, அப்போது தேவை அதிகரிக்கும் என்றும், தேவையைப் பூர்த்தி செய்ய அதிக உற்பத்தி ஏற்படும். இதனால் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், அதிக வேலைவாய்ப்புகள் ஏற்படும்போது, பரந்த வரி விதிப்பு ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
Also Read: ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை.. ஜிஎஸ்டி மாற்றத்தால் அதிரடியாக குறையபோகும் விலை?
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரி செலுத்தும் தொழில்முனைவோரின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. கடந்த 8 ஆண்டுகளில் அது 1.5 கோடியாக மட்டுமே அதிகரித்துள்ளது தவிர 10 லட்சமாக குறையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.