தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முறையில் மாற்றம் – தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு – என்ன தெரியுமா?
Postal Votes Before EVMs: மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்குகள் கடைசி சுற்று எண்ணிக்கை முடிவதற்கு முன், தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருப்பதற்காக இத்தகையை முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி, செப்டம்பர் 25: வாக்கு எண்ணிக்கை செயல்முறையில் ஒரே மாதிரியான நடைமுறை மற்றும் தெளிவான வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) செப்டம்பர் 25, 2025 அன்று புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதன் படி, இனிமேல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவான வாக்குகளின் இறுதி அல்லது கடைசிக்கு முந்தைய சுற்று எண்ணிக்கையைத் தொடங்கும் முன், தாபல் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.
தபால் வாக்குகள் முதலில் அறிவிக்கப்பட வேண்டும்
பொதுவாக, தபால் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். அதற்குப் பின்பு அரைமணி நேரத்திற்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படும். இதுவரை இருந்த விதிகளின் படி, சில நேரங்களில் தபால் வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படாத போதும், மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முழுமையடையக்கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதலின்படி, அஞ்சல் வாக்குகள் முடிவடையாமல் இறுதி மின்னணு வாக்கு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தீபாவளி போனஸ்.. ரயில்வே ஊழியர்களுக்கு சப்ரைஸ்.. மத்திய அமைச்சரவை அறிவிப்பு




இதன் மூலம் வாக்கு எண்ணிக்கையில் எந்தவித குழப்பமும் ஏற்படாமல் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் வாக்கு திருட்டு புகார்கள் தொடர்பாக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இத்தகைய முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
ராகுல் காந்தி கடும் விமர்சனம்
சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் வாக்கு திருடர்களை பாதுகாக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். கடந்த செப்டம்பர் 19, 2025 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அதிகாலை 4 மணிக்கு எழுந்து, 36 விநாடிகளில் 2 வாக்காளர்களின் பெயரை நீக்கி, மீண்டும் தூங்கச் செல்லும் நிலை தான் தற்போது நடந்தது. தேர்தல் ஆணையம் விழித்திருந்தும் திருட்டை பார்த்துக் கொண்டே இருந்தது. திருடர்களை பாதுகாத்தது என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிக்க : சினிமா டிக்கெட் உச்ச வரம்பு ரூ.200 – கர்நாடக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தது. பொதுமக்கள் ஆன்லைனில் வாக்காளர் பெயரை நீக்க முடியாது. எந்தவித வாக்கு திருட்டும் நடைபெறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.