CBSE: 75% வருகைப்பதிவு அவசியம்.. 10, 12 மாணவ, மாணவியர்களுக்கு சிபிஎஸ்இ வார்னிங்!
சிபிஎஸ்இ வாரியம் 2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 75% வருகை கட்டாயம் என அறிவித்துள்ளது. வருகைப் பதிவு இனி உள் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்வதற்கான விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

புதுடெல்லி, செப்டம்பர் 16: மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ கீழ் செயல்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகைப் பதிவு இனிமேல் நேரடியாக உள் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இணைக்கப்படும் என்றும், இரண்டு ஆண்டு கல்விச் சுழற்சி முழுவதும் வழக்கமான பங்கேற்பு அவசியமாகும் என்றும் சிபிஎஸ்இ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத மாணவ, மாணவியர்கள், பொதுத்தேர்வுகள் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் கூடுதலாக பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கான விதிகளையும் சிபிஎஸ்இ வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
கூடுதல் பாடம் தொடர்பான அறிவிப்பு
அதன்படி 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாய ஐந்து பாடங்களைத் தவிர இரண்டு கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்யலாம் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்கள் இரண்டு கல்வியாண்டுகளில் இந்தப் பாடங்களைப் படிக்க வேண்டும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆய்வகங்கள் அல்லது ஒப்புதல் இல்லாத பாடங்களை வழங்குவதற்கு எதிராக செயல்படும் பள்ளிகளுக்கு இதன்மூலம் சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள் முக்கிய அல்லது கூடுதல் வினாத்தாள்கள் தொடர்பான பாடங்களை இனி எடுக்க முடியாது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
Also Read: CBSE துணைத் தேர்வு 2025: மாணவர்களுக்கான பதிவு துவக்கம்… விண்ணப்பிப்பது எப்படி?
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில் 2025-26 கல்வியாண்டிற்கான 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களைப் பதிவு செய்வதற்கான விரிவான வழிமுறைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் பரிக்ஷா சங்கம் லிங்க் மூலம் இந்த செயல்முறையை முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிப்பதில் துல்லியத்தை உறுதி செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்ய இது ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. மேலும் தேவைப்பட்டால், மாணவர்களின் விவரங்களை பெற்றோருக்குத் தெரிவிப்பதன் மூலம் உடனடி திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடைய பெயர், பிறந்த தேதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களின் சரியான விவரங்களுடன் பதிவு செய்யப்படுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஜூன் 25, 2025 அன்று தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னோட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் பள்ளிகள் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பதிவுத் தரவைச் சமர்ப்பிக்கும் போது மாணவர்களின் APAAR எனப்படும் Automated Permanent Academic Account Registry ஐடிகளை இணைக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
பதிவு செய்வதற்கான கடைசி தேதி முடிந்தப் பிறகு, பள்ளிகள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒருமுறை சரிபார்ப்பு வசதியை உருவாக்கும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், நவம்பர் 14 முதல் நவம்பர் 28, 2025 வரை செய்யலாம். அதன் பிறகு எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.