பீகார் தேர்தல்: எந்தெந்த கட்சி எவ்வளவு தொகுதிகளில் வெற்றி?.. இதோ இறுதி முடிவு!!

EC final results out: பீகார் தேர்தலில் வரலாறு காணாத வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. அதேசமயம், யார் முதல்வர் என்பதில் பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே சலசலப்பு ஏற்படாலம் என்றும் கூறப்படுகிறது.

பீகார் தேர்தல்: எந்தெந்த கட்சி எவ்வளவு தொகுதிகளில் வெற்றி?.. இதோ இறுதி முடிவு!!

கோப்புப்படம்

Updated On: 

15 Nov 2025 08:55 AM

 IST

பீகார், நவம்பர் 15: பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு இருந்தது. அதன்படி, முதல்முறையாக அங்கு ஒட்டுமொத்தமாக 66.91% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனால், தேர்தல் முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. பல மாதங்களுக்கு முன்னரே பீகார் தேர்தல் நாடு முழுவதும் கவனிக்கும் ஒரு நிகழ்வாக மாறி இருந்தது. இதற்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பிரதான காரணமாக அமைந்தது. ஏனெனில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தில் 68 லட்சத்துக்கு அதிகமான பெயர்கள் அம்மாநிலத்தில் நீக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி பல்வேறு சிறப்புகளுடன் நடைபெற்ற இந்த தேர்தல் பீகாரையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்:

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 140 – 170 இடங்கள் வரை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதேசமயம், மகா பந்தன் கூட்டணி 70- 100 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை நிராகரித்த தேஜஸ்வி யாதவ், தங்கள் கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்குமா? அல்லது கருத்துக்கணிப்புகள் பொய்யாகுமா? என தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.

Also read: வெற்றிக்கு காரணம் இதுதான்…. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி கருத்து

முன்னிலை வகித்த NDA கூட்டணி:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீகாரில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை உண்மையாக்கும் வகையில், தொடக்கம் முதலே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள் என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே 190க்கும் அதிகமான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி முடிவுகள்:

இறுதியில் மொத்தமுள்ள 243 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேசமயம், பாஜக (BJP) 89 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, ஐக்கிய ஜனதாதளம் (JDU) 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) (LJPRV) 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAMS) 5, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா (RSHTLKM) 4 இடங்களை கைப்பற்றி இருந்தன.

மகா பந்தன் கூட்டணி இறுதி முடிவுகள்:

மறுபுறம் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணிக்கு வெறும் 35 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதில் ராஷ்டிரீய ஜனதாதளம் (RJD) – 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 75 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதாதளம் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருப்பது அதன் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

Also read: பீகார் தேர்தல்: மாநிலத்தையே வியந்து பார்க்க வைத்த சிராக் பஸ்வானின் வெற்றி!!

அதேசமயம், மகா பந்தன் கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி (INC) – 6, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு CPI(ML)(L) – 2, ஐஐபி கட்சி (IIP) – 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு CPI(M) – 1 இடங்களையும் பிடித்தன. இவற்றை தவிர, மஜ்லிஸ் கட்சி (AIMM) 5 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் (BSP) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.