காதலிக்க மறுத்த மாணவி.. கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
Young Man Killed College Student in Karnataka | பெங்களூரில் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நபர், அந்த மாணவி தன்னை காதலிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்த சமபவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீராமபுரம், அக்டோபர் 18 : கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது 20 வயது மகள் யாமினி பிரியா கல்லூரில் பி பார்ம் படித்து வந்துள்ளார். அக்டோபர் 16, 2025 அன்று கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி, தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, மல்லேசுவரம் மந்த்ரி வணிக வளாகம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது இளைஞர் ஒருவர் அவரை வழி மறித்து தகராறு செய்துள்ளார். அதுமட்டுமன்றி, இந்த இளைஞர் மாணவியை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார்
இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் என்ற இளைஞர் அவரை ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்காததால் மாணவி இந்த கொடூர தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : சைபர் கிரைம் மோசடியில் ரூ.13 லட்சம் இழந்த வங்கி மேலாளர்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிக்கே இந்த நிலையா?




போலீஸ் விசாரணையில் விக்னேஷ் குறித்து வெளியான பகீர் தகவல்கள்
மாணவியை கொலை செய்த விக்னேஷ் கொரோனா காலக்கட்டத்தில் மாநகராட்சி மார்ஷல் போல் நடித்து பணம் பறித்த புகாரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்பு மீண்டும் ஜாமினில் வெளியே வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், விக்னேஷை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், அவர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் நெளிந்த புழுக்கள்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
தகவலின் அடிப்படையில் விக்னேஷ் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்ற போலீசார் அவரை 24 மணி நேரத்திற்குள்ளாக கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.