Guruvayur Temple: தொடரும் அதிர்ச்சி.. குருவாயூர் கோயிலில் மிகப்பெரும் முறைகேடு!
Kerala Gold Missing Row: கேரள குருவாயூர் கோயிலில் நடந்த தணிக்கையில், தங்கம், தந்தம் போன்ற மதிப்புமிக்க ஆபரணங்கள் காணாமல் போனதும், ரூ.79 லட்சம் நிதி இழப்பும் கண்டறியப்பட்டுள்ளது. பூஜை பொருட்கள் முறைகேடு குற்றச்சாட்டுகளும் மாநில மக்களிடையே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருவாயூர் கோயில்
கேரளா, அக்டோபர் 23: கேரள மாநிலம் மிகப்பெரிய அளவில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில், வைக்கம் மகாதேவர் கோயிலை தொடர்ந்து, புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மாயமானதாக தணிக்கையில் தெரிய வந்துள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் குருவாயூர் கோவிலில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தணிக்கையில், தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் தந்தம் உள்ளிட்ட சொத்துக்கள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவை முறையான நடைமுறை இல்லாமல் கையாளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நடத்தும் தங்கத் திட்டத்தில் வைப்புத்தொகை தொடர்பாக ரூ.79 லட்சம் வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தணிக்கையில் தெரிய வந்துள்ளது. 2019-2020, 2020- 2021 தொடர்பான மாநில தணிக்கைப் பிரிவு அறிக்கைகளின்படி, குருவாயூர் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள புன்னத்தூர் கோட்ட யானைகள் சரணாலயம், யானைத் தந்தங்கள் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்களை இழப்பதற்கான மையமாக உள்ளது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
Also Read: அடுத்த சர்ச்சை.. வைக்கம் கோயிலில் 255 கிராம் நகைகள் மாயம்
2019- 2020 ஆம் ஆண்டு நடந்த தணிக்கை அறிக்கையின்படி, 522.96 கிலோவுக்கும் அதிகமான தந்தங்கள் மதிப்புமிக்க பொருட்களாக செதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் ஒரு கிலோ கூட வனத்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை. அந்த தந்தப் பொருட்கள் தொடர்புடைய ரசீதுகளும் காணவில்லை என சொல்லப்படுகிறது.
சட்டப்படி, தேவஸ்தானம் தந்தங்கள் மற்றும் தந்த பொருட்களின் பட்டியலை வனத்துறையிடம் 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும், ஆனால் விவரங்களோ பொருட்களோ வனத்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில், தேவசம் தொடர்பான பல்வேறு நிறுவனங்கள், ஓய்வு இல்லங்கள் ஆகியவற்றின் மொத்த செலவு, , அவற்றின் மொத்த வருவாயை விட சுமார் ரூ.25 கோடி அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
Also Read: சபரிமலையில் காணாமல் போன தங்கம்.. என்ன நடந்தது?
அதேசமயம் கோயிலின் செலவு அதன் வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 15 கோயில்களை நிர்வகிக்கும் குருவாயூர் தேவசத்தின் வாரியத் தலைவர் வி.கே. விஜயன், வாரியம் பொறுப்பேற்பதற்கு முன்பே தணிக்கை தொடர்பான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். நீதிமன்ற அறிவிப்புகளுக்கு பதிலளிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தணிக்கையின் போது தினசரி பூஜைக்குப் பயன்படுத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் பராமரிப்பிலும் பல குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தது. அதாவது பூஜைக்காக எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களும் அதிகாரிகளிடம் திருப்பித் தரப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில மதிப்புமிக்க பொருட்களின் எடை 10 மாதங்களில் பல நூறு கிராம் குறைந்துள்ளது. தங்க கிரீடம் வெள்ளி கிரீடமாக மாற்றப்பட்டது போலவும் கண்டறியப்பட்டிருக்கிறது.
பக்தர்களின் நன்கொடைகளும் 2016ம் ஆண்டு முதல் அப்டேட் செய்யப்படாமல் இருந்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில அரசை, கேரள பாஜக கடுமையாக சாடியுள்ளது. தொடர்ச்சியாக கோயில்களில் முறைகேடு நடப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.