Aadi Tuesday: பலன்களை அள்ளித்தரும் ஆடி செவ்வாய்.. விரதம் இருப்பது எப்படி?
ஆடி மாதம் பராசக்தி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 2025 ஆம் ஆண்டின் ஆடி செவ்வாய்கிழமைகளில் விரதம் இருப்பது கடன் பிரச்சனைகள், கல்வி மற்றும் வேலை தடைகள் நீங்க உதவும் என நம்பப்படுகிறது.

ஆன்மிகத்தின் ஆடி மாதம் என்பது பராசக்தி மாதம் என சொல்லப்படுகிறது. அதாவது இந்த காலக்கட்டத்தில் பெண் தெய்வங்கள் மிகுந்த வலிமையுடன் காணப்படும் என்பதால் முழுக்க முழுக்க அம்மன் கோயில்களில் கொண்டாட்டங்கள் அரங்கேறும். இப்படியான மாதத்தில் பல விஷேச தினங்கள் வந்தாலும் ஆடி மாத செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகியவை அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்கள் இல்லாவிட்டாலும் இந்த 3 நாட்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாக 2025 ஆம் ஆண்டு ஆடி மாத செவ்வாய்கிழமையானது ஜூலை 22, ஜூலை 29, ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 12 ஆகிய 4 தினங்கள் வருகிறது. இந்த 4 செவ்வாய்கிழமை நீங்கள் விரதம் இருக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு செவ்வாய் அன்று கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
ஆடி செவ்வாய் கிழமை முக்கியத்துவம்
பொதுவாக ஒருவருக்கு வலியுடன் கூடிய கர்ம வினைகளை தரக்கூடியவர் செவ்வாய் பகவான் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் சூரிய பகவான் ஆடி மாதம் கடக ராசியில் பெயர்ச்சி அடைவார். இந்த மாதத்தில் குருவும் சந்திரனும் உச்சம் பெறும் நிலையில் சந்திரன் நீச்சம் அடைகிறார். அதனால் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை ஆகும். ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் நாம் மகாலட்சுமியை வழிபட வேண்டும் எனவும், மேலும் பெண் தெய்வங்களை வழிபட்டால் பல பலன்கள் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
Also Read: Aadi Friday: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
விரதம் இருக்கும் வழிமுறைகள்
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலையில் இருந்து பெண்கள் புனித நீராடி பின்னர் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். ஆண்கள் இந்த விரதம் இருக்கலாம் என்றாலும் பெண் தெய்வம் என்பதால் பெண்கள் விரதம் இருப்பது இன்னும் பலன்களை அதிகமாக கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நாளில் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது இரட்டிப்பு பலன்களை தரும் என நம்பப்படுகிறது.
அதேசமயம் உடல்நல பாதிப்பு இருப்பவர்கள், பசியால் தங்கள் எண்ணத்திலிருந்து தவறுபவர்கள் பால் மற்றும் பழம் எடுத்து விரதத்தை தொடரலாம். மேலும் மாலையில் இரண்டு விளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு பத்தி சாம்பிராணி போன்ற தூபங்களை காட்டி பூஜை அறையை பக்தி மணம் கமழ செய்ய வேண்டும். மேலும் வழிபாட்டின்போது அம்மனுக்கு உகந்த ஆடி மாத கூழ் செய்து படைக்கலாம். வழிபாடு செய்யும்போது அம்மனுக்குரிய மந்திரம், பக்தி பாடல்களை பாராயணம் செய்யலாம். அல்லது டிவி, செல்போனில் ஒலிக்கவிட்டு இறையருள் நிரம்ப செய்யலாம்.
Also Read: Aadi Sunday: ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால் இவ்வளவு பலனா?
பின்னர் அந்த கூழை நீங்கள் முதலில் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். மேலும் அக்கம் பக்கத்தினர், வீட்டில் உள்ளவர்கள் என அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இந்நாளில் விரதம் இருப்பதால் கடன் பிரச்னை, கல்வி மற்றும் வேலையில் உள்ள தடைகள் ஆகியவை நீங்கும் என நம்பப்படுகிறது.
(இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)