Dog Bite: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நாய் கடி.. ரேபிஸ் வராமல் தடுக்க முதலில் என்ன செய்ய வேண்டும்?
Dog Bite Prevention Tips: நாய் கடித்தால் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். கடித்தால், உடனடியாக காயத்தை ஓடும் நீர் மற்றும் சோப்பால் குறைந்தது 10 நிமிடங்கள் கழுவவும். தொடர்ந்து, டெட்டால் போன்ற கிருமி நாசினிகளை பயன்படுத்துங்கள்.

நாய் கடித்தல்
நாய் கடித்தல் (Dog Bite) மிகவும் பொதுவானதாக கருதப்படுகிறது. ஆனால், இதை புறக்கணித்தால் ஆபத்தானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானதும் கூட. சமீபத்தில் கூட கபடி வீரர் முதல் அப்பாவி குழந்தை வரை நாய்க்கடியால் உயிரிழந்தனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ரேபிஸ் (Rabies) என்பது நாய்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகளின் கடி அல்லது கீறல்களால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகும். ரேபிஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே எச்சில் மூலம் பரவுகிறது. ரேபிஸ் அறிகுறிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.
ALSO READ: குளிர்காலத்தில் எலும்பு வலி, சோர்வுக்கு இதுவே காரணம்.. இதை உடனே சரிசெய்யுங்கள்..!
இந்தியாவில் அதிகளவில் பாதிப்பு:
WHOவின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் ரேபிஸால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். இதில், பெரும்பாலானவை சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படாததால் ஏற்படுகின்றன. செல்லப்பிராணியாக இருந்தாலும் சரி, தெருநாள் கடித்தாலும் சரி, உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதும் ரேபிஸ் எதிர்ப்பு ஊசி பெறுவதும் மிக முக்கியம். இந்த ஊசி சில மணி நேரங்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், வைரஸ் உடல் முழுவதும் பரவி, மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இறுதியில் இருதய அமைப்பை தாக்கி மரணத்திற்கு வழிவகுக்கும்.
நாய் கடித்த பிறகு எவ்வளவு விரைவில் ஊசி போட வேண்டும்..?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நாய் கடித்த 24 மணிநேரத்திற்குள் முதல் ஊசி போடுவது அவசியம். அவ்வாறு செய்ய தவறினால் ரேபிஸ் அபாயம் அதிகரிக்கும். எனவே, விரைவில் ஊசி போடுவது பாதுகாப்பானது. பூனை கடித்தாலும் ஊசி போடுவது முக்கியம்.
நாய் கடியின் ஆரம்ப அறிகுறிகள்:
- காயத்தை சுற்றி கூச்ச உணர்வு அல்லது எரிச்சல்
- காய்ச்சல், சோர்வு, தலைவலி
- தண்ணீர் பயம்
- தசைப்பிடிப்பு
நாய் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்..?
நாய் கடித்தால் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். கடித்தால், உடனடியாக காயத்தை ஓடும் நீர் மற்றும் சோப்பால் குறைந்தது 10 நிமிடங்கள் கழுவவும். தொடர்ந்து, டெட்டால் போன்ற கிருமி நாசினிகளை பயன்படுத்துங்கள். அரசு மருத்துவமனை அல்லது மருத்துவரை சந்தித்து ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள். காயம் ஆழமாக இருந்தால், இம்யூனோகுளோபுலின் ஊசியும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போடலாம்.
ALSO READ: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிக்குன் குனியா.. இதன் அறிகுறிகள் என்ன..?
ரேபிஸ் உடலை எவ்வாறு பாதிக்கிறது..?
நாய் கடித்தால் ஏற்படும் காயம் வழியாக ரேபிஸ் வைரஸ் உடலில் நுழைகிறது. பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அதன் உமிழ்நீரில் இருக்கும் வைரஸ் உங்கள் தோல், தசைகள் மற்றும் நரம்புகளை நேரடியாக அடைகிறது. இதன் பிறகு, இந்த வைரஸானது முதுகுத் தண்டு மற்றும் மூளையை அடைந்து, குழப்பம், வலிப்பு, தலைச்சுற்றல் மற்றும் உடல் முழுவதும் ஆட்டம் கொடுக்கும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆபத்தானது. ஏனெனில், அறிகுறிகள் தொடங்கிய 10 முதல் 15 நாட்களுக்குள் இறக்கலாம்.