Child Care: குழந்தைக்கு மசாஜா? அப்போ! செய்யக்கூடாத 5 தவறுகள்.. மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
Newborn Baby Massage: புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எண்ணெய் அதிகமாக தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வைப்பார்கள். இருப்பினும், ஒரு சில இடங்களில் மசாஜ் செய்யாமல் விடுவது நல்லது. அந்தவகையில், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எப்போது, எங்கு மசாஜ் செய்யக்கூடாது என்பது பற்றி மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஹரிணி ஸ்ரீ
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது உடலை வலுப்படுத்தவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது, ஆனால் சரியாகச் செய்யாவிட்டால், அது தீங்கு விளைவிக்கும். மசாஜ் செய்யும் போது சில தவறுகள் செய்வது அசௌகரியம், காயம் அல்லது பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நம் கண் முன்னே, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு (Child Care) எண்ணெய் அதிகமாக தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வைப்பார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமானது என்றாலும், ஒரு சில இடங்களில் மசாஜ் செய்யாமல் விடுவது நல்லது. அந்தவகையில், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எப்போது, எங்கு மசாஜ் செய்யக்கூடாது என்பது பற்றி மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: பிறந்து 6 மாதமாகியும் குழந்தை தவழவில்லையா..? மருத்துவர் சுபாஷ் சூப்பர் டிப்ஸ்!
மூக்கு மற்றும் காதுகளில் எண்ணெய் தேய்க்காதீர்கள்:
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கு பதிலாக பெரியவர்கள் பயன்படுத்துகிறார்கள். இது குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இதை கவனத்தில் கொள்வது முக்கியம். மேலும், குழந்தைகளின் மூக்கு மற்றும் காதுகளில் எண்ணெய் வைத்து தேய்ப்பது அவற்றை சுத்தம் செய்யும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வது ஆபத்தானது. குழந்தைகளின் மூக்கு மற்றும் காதுகளில் எண்ணெய் வைப்பது அடைப்பை ஏற்படுத்தி தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
குழந்தையை சுத்தமாக வைக்க விரும்பினால் மற்றும் காதுகளின் வெளிப்புற பகுதியை சுத்தமான மற்றும் சற்று ஈரமான துணியால் சுத்தம் செய்யலாம்.
குழந்தையின் அந்தரங்க பகுதிகளில் எண்ணெய்:
பல நேரங்களில் பெரியவர்கள் எண்ணெயை குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வது தொற்றுநோயை ஏற்படுத்தும். அந்தரங்க பகுதிகளில் எண்ணெய் தடவுவது ஒவ்வாமை எரிச்சல் மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அந்தவகையில், குழந்தையின் அந்தரங்கப் பகுதியை சற்று ஈரமான பஞ்சால் சுத்தம் செய்யுங்கள், ஆனால் எண்ணெய் தடவுவதைத் தவிர்க்கவும்.
குழந்தைகள் மீது அழுத்தி மசாஜ் செய்தல்:
குழந்தைக்கு அழுத்தி மசாஜ் செய்வது எலும்புகளை விரைவாக வலுப்படுத்தும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இதுவும் தவறான கருத்து. குழந்தைக்கு அழுத்தி மசாஜ் செய்வது மென்மையான எலும்புகள் மற்றும் தசைகளை காயப்படுத்தும். அதன்படி, குழந்தைகளுக்கு மிகவும் லேசாகவும் இல்லாமல், மிகவும் அழுத்தியும் இல்லாமல் மிதமாக மேற்கொள்வது நல்லது.
குழந்தையின் மீது கவனம்:
மசாஜ் செய்யும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அல்லது வேறு எந்த வேலையிலும் ஈடுபடுவது சரியானது அல்ல. உங்கள் குழந்தையுடன் கண்களைப் பார்த்து அன்பாகப் பேசுங்கள். இது உங்களின் பிணைப்பை வலுப்படுத்தும். குழந்தையை பாதுகாப்பாக உணர வைத்து, மசாஜ் செய்வது குழந்தைக்கு அதிக நன்மை தரும்.
ALSO READ: குழந்தைகள் திடீரென மூச்சை பிடித்துக்கொள்கிறதா? மருத்துவர் ஜெரிஷ் சொல்லும் சூப்பர் அட்வைஸ்!
குழந்தையை கவனியுங்கள்:
குழந்தை கடுமையாக அழும்போதோ அல்லது வேகமாக தலையை திருப்பினாலோ, அப்போது குழந்தைக்கு ஃபோர்ஸ் செய்து மசாஜ் செய்யக்கூடாது. அதேபோல், குழந்தை பால் குடித்த சில நிமிடங்களிலோ, குழந்தை பசியோடு இருக்கும்போதோ மசாஜ் செய்யக்கூடாது.
குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது படுக்கை அல்லது டேபிள் மீது மசாஜ் செய்யாமல், தரையில் பாய் விரித்து மசாஜ் செய்வது நன்மை பயக்கும்.