கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லக்குண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான தங்க ஆபரணங்கள், மாநிலம் முழுவதும் பெரும் ஆர்வத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. முதற்கட்ட ஆய்வுகளின்படி, இவை சுமார் 300 ஆண்டுகள் பழமையானவை என்றும், விஜயநகர பேரரசுக் காலத்தையோ அல்லது அதனை ஒட்டிய காலத்தையோ சேர்ந்திருக்கலாம் என்றும் தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை, லக்குண்டியைச் சேர்ந்த ரிட்டி குடும்பம் புதிய வீட்டு அடித்தளம் தோண்டியபோது, தங்க ஆபரணங்கள் நிரம்பிய ஒரு சிறிய செம்புக் குடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அதை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து முதல்வருக்கும் தகவல் தெரிவித்தனர்.