நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வெந்தயம் – எப்படி சாப்பிடுவது சிறந்தது?
Fenugreek Health Benefits : நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் முக்கியமான இயற்கை மருந்தாகும். இவை இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த உதவுகின்றன. வெந்தயத்தை ஊறவைத்து முளைக்கச் செய்து சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இந்த கட்டுரையில் வெந்தயத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

நீரிழிவு (Diabetes) என்பது உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாகவோ அல்லது சரியாக செயல்படாத போதோ ஏற்படும் நிலையாகும். இந்த நோய் உடலின் பல உறுப்புகளை மெதுவாக பாதிக்கக்கூடியதாகவும், பலவிதமான உடல் சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர சிகிச்சை இல்லை என்றாலும், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில், வெந்தயம் (Fenugreek) ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இது இந்திய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். ஆனால் அதற்கு பல மருத்துவ குணங்களும் உள்ளன. இந்த கட்டுரையில் வெந்தயத்தை தினமும் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு நோய் எப்படி கடுப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
வெந்தயத்தின் சிறப்பு
வெந்தயம் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் உள்ள கேலக்டோமனன் என்ற பொருள் உடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துகிறது. மேலும் உடல் இன்சுலின் சரியாக செயல்பட உதவுகிறது. கூடுதலாக, வெந்தயம் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு இயற்கையான வழியாகக் கருதப்படுகிறது.
எப்படி எடுத்துக்கொள்வது?
வெந்தயத்தைப் பயன்படுத்த பல ஆரோக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இந்த முறை இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இன்னும் அதிக நன்மைகளுக்கு, ஊறவைத்த வெந்தயத்தை முளைக் கட்டிய தானியமாகவும் பயன்படுத்தலாம். இது உடலுக்கு அற்புதமான பலன்களைத் தரும். முளைகட்டிய வெந்தயம் செரிமானத்திற்கு நல்லது மட்டுமல்ல, அதன் கசப்புத் தன்மையையும் சிறிது குறைக்கிறது.




இதை உணவில் எப்படிச் சேர்ப்பது?
கறி, பருப்பு, சாதம் ஆகியவற்றில் சிறிய அளவில் வெந்தயத்தைச் சேர்ப்பது வழக்கம். இருப்பினும், வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாகப் பெற, அதை மோருடன் சேர்த்து உட்கொள்வதும் நன்மை பயக்கும். வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை கலந்து பேஸ்ட் செய்து சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இது செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்கிறது. இது தோல் பிரச்னைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
மருத்துவரின் ஆலோசனை கட்டாயம்
நீங்கள் ஏற்கனவே நீரிழிவுக்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் உணவில் வெந்தயத்தைச் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கும் என்பதால், அது சில மருந்துகளுடன் வினை புரிந்து பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பிற ஆரோக்கிய நன்மைகள்
வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் பெண்களின் ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளில் நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளன. வெந்தயம் சாப்பிடுவது முடி வளர்ச்சி மற்றும் சரும ஆரோக்கியம் போன்ற விஷயங்களுக்கு உதவுகிறது. இது உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் நன்மை பயக்கும்.