Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புரோட்டீன் பவுடர் வாங்கப்போறீங்களா? இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!

Protein Powder Buying Tips : உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் புரதம் மிகவும் முக்கியமானது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஒருவர் அவரது உடல் எடைக்கு ஏற்ப புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்கின்றனர். இந்த கட்டுரையில் புரோட்டீன் பவுடரை வாங்கும்போது செய்யும் 5 தவறுகள் குறித்து பார்க்கலாம்.

புரோட்டீன் பவுடர் வாங்கப்போறீங்களா? இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 05 Jul 2025 22:54 PM

உடல் ஆரோக்கியமாக இயங்க புரத சத்து (Protein) மிகவும் அவசியம். ஒருவர் உடல் எடைக்கு (Body Weight) ஏற்ப புரதம் எடுத்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக ஒருவர் 80 கிலோ எடை இருந்தால், அவர் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் என்ற கணக்கில் 80 கிராம் புரோட்டீன் எடுத்துக்கொள்வது அவசியம் என சொல்கிறார்கள். உணவுகளில் மட்டும் கிடைக்கும் புரோட்டீன் சிலருக்கு போதுமானதாக இருக்காது. குறிப்பாக வயதாகும்போது புரோட்டீனின் தேவை அதிகரிக்கும். உடலுக்கு போதுமான புரோட்டீன் கிடைக்காத போது அது நம் எலும்புகளில் உள்ள புரோட்டீனை எடுத்துக்கொள்ளும். இதனால் எலும்புகள் விரைவிலையே வலுவிழக்கும். சிலர் புரோட்டீனை  பெற புரோட்டீன் பவுடரை சாப்பிடுகின்றனர்.

அது உடலின் புரோட்டீன் தேவையை சமாளிக்கு உதவும் என்றாலும் சில தவறுகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஒரு விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் ஐந்து முக்கியமான தவறுகளைப் பற்றி எச்சரிக்கிறார். அவரது எச்சரிக்கை சரியான புரோட்டீன் பவுடரை தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும்.  புரோட்டீன் பவுடர் வாங்கும்போது அதன் தரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். புரோட்டீன் பவுடர் வாங்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கிறார். சரியான புரோட்டீன் பவுடரை தேர்ந்தெடுப்பதற்கு இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. தவறான புரத மூலமும் வகையும்

உங்கள் உடலுக்கு நன்கு ஜீரணிக்கக்கூடிய  புரோட்டீன் தேவை. எதில் இருந்து புரோட்டீன் பெறப்பட்டிருக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு தேவை. பொதுவான புரோட்டீன் ஆதாரங்களில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. மோரில் கொழுப்பு குறைவாக உள்ளது, கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, மேலும் குறைவான கலோரிகள் தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது. சைவ உணவு உண்பவர்களுக்கு பட்டாணி, சோயா, அரிசி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் புரோட்டீன் சிறந்தது. எனவே இவற்றில் இருந்து பெறப்படும் புரோட்டீன் பவுடரை பயன்படுத்தலாம்.

2. எடுத்துக்கொள்ள வேண்டிய புரோட்டீன் அளவு

நல்ல தரமான புரோட்டீன் பவுடர்களில் ஒரு ஸ்கூப்பிற்கு 20 முதல் 25 கிராம் புரதத்தை வழங்க வேண்டும். புரோட்டீன் பவுடரில் உள்ள புரோட்டீனின் அளவு குறைந்தது 70-90% ஆக இருக்க வேண்டும். இதை விடக் குறைவாக இருந்தால் அது நமக்கு தேவையற்றது என கருதப்படுகிறது.

3. சேர்க்கப்பட்ட மூலப்பொருள் பட்டியலை சரியாகப் படிக்காதது

சர்க்கரைகள் சேர்க்கப்பட்டது, செயற்கை இனிப்புகள் போன்ற தேவையற்ற பொருட்களைக் கொண்ட பவுடரை தவிர்க்கவும். சுருக்கமான, சுத்தமான மூலப்பொருள் பட்டியல்கள் நல்லது.

4.  சான்றிதழ்களைப் புறக்கணித்தல்

நம்பகமான பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பை சோதித்து சான்றளிக்கின்றன. இந்தியாவில் NSF சான்றிதழ், FSSAI அங்கீகாரம் போன்ற சான்றிதழ் இருக்கிறதா என பாருங்கள். இவை தயாரிப்பில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இல்லை என்பதையும், முறையாக லேபிளிடப்பட்டுள்ளதையும் உறுதி செய்கின்றன.

5. பிராண்ட் பெயர்

வெளிப்படையான பிராண்டுகளைத் தேர்வுசெய்க. அவர்களுக்கு நேர்மறையான வாடிக்கையாளர் ரிவியூ இருக்க வேண்டும். ஆய்வக சோதனை முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பிராண்டுகள் இன்னும் சிறந்தவை. விளம்பரங்களை மட்டும் நம்பாமல், முழுமையான ஆராய்ச்சி செய்யுங்கள்.