தம்பதியருக்கு ஒரே இரத்த வகை இருந்தால் பாதிப்பா? திருமணத்துக்கு முன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்!
Blood Test Before Marriage : பலரும் தவறவிடும் இந்த ஒரு பரிசோதனை, குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கக்கூடியது. Rh காரணி (Rh Factor) மற்றும் தலசீமியா போன்ற மரபணு தொடர்பான கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் திருமணத்துக்கு முன் தம்பதியருக்கு பரிசோனை செய்யப்படுவது அவசியம்.

தம்பதியருக்கு ஒரே மாதிரியான இரத்த வகை இருந்தால், குழந்தை பிறப்பதில் சிரமம் ஏற்படும் என்ற கருத்து மக்களிடையே அடிக்கடி நிலவுகிறது. ஆனால் அந்த கருத்தில் உண்மையில்லை. ஒரே இரத்த வகை (Blood Group) கொண்ட தம்பதிகளுக்கு பொதுவாக குழந்தை பிறப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரே இரத்த வகையைக் கொண்டிருப்பதால் குழந்தை பிறப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. மேலும் விந்து மற்றும் முட்டைகளில் இரத்தக் குழு ஆன்டிஜென்கள் இருக்காது. எனவே, இது கருத்தரித்தல் (Pregnancy) மற்றும் குழந்தை வளர்ச்சியில் நேரடி விளைவை ஏற்படுத்தாது. முக்கிய பிரச்சனை Rh காரணியுடன் தொடர்புடையது. Rhesus (ரீசஸ்) என்னும் இரத்தக் குழு காரணி (Rh factor) இரத்த வகையை வரையறுக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று.
கர்ப்ப காலங்களில், Rh பாசிட்டிவ் கணவனுக்கும், Rh நெகட்டிவ் மனைவிக்கும் பிறக்கும் குழந்தைக்கு இடையில் சிக்கல்கள் ஏற்படலாம். இதனால்தான் Rh வகையை தெரிந்துகொள்வது முக்கியம்.
Rh இணக்கமின்மை பிரச்சனை எப்போது ஏற்படும்?
தாயின் இரத்த வகை Rh-நெகட்டிவ் ஆகவும், தந்தையின் இரத்த வகை Rh-பாசிட்டிவ் ஆகவும் இருக்கும்போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், குழந்தை Rh பாசிட்டிவாக இருந்தால், தாயின் உடல் குழந்தையின் இரத்தத்தை நெகட்டிவ் குழுவாக அடையாளம் கண்டு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யத் தொடங்கலாம். இது பொதுவாக முதல் கர்ப்பத்தில் பெரிய பிரச்னையாக இருக்காது. ஆனால் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, இந்த ஆன்டிபாடிகள் குழந்தையின் இரத்த சிவப்பணுக்களை அழிக்கக்கூடும். இது Rh இணக்கமின்மை எனப்படும் ஒரு கடுமையான நிலையை ஏற்படுத்துகிறது.




இதையும் படிக்க: கர்ப்ப காலத்தில் கை, கால்கள் வீங்குவது ஏன்? வீக்கத்தை இப்படி சரிசெய்யலாம்..!
குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள்
இதனால் குழந்தைகளுக்கு இரத்த சோகை, மஞ்சள் காமாலை அல்லது சில சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு மூளை தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால் இப்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் ஆன்டி-டி இம்யூனோகுளோபுலின் ஊசி மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.
திருமணத்திற்கு முன் மருத்துவர்கள் இரத்த பரிசோதனை செய்துகொள்வது அவசியம். திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால், எழும் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிந்து தடுக்கலாம் அல்லது முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம். குறிப்பாக எதிர்காலத்தில் நம் குழந்தைகளுக்கு இது பெரிதும் நன்மை பயக்கும்.
இதையும் படிக்க: தாய்ப்பால் கொடுக்க முடியாமல் சிரமமா..? சுரப்பை அதிகரிக்க இந்த உணவுகள் உதவும்..!
திருமணத்திற்கு முன் இரத்த பரிசோதனை செய்வதன் அவசியம்
- தாய் Rh-நெகட்டிவ் ஆகவும், தந்தை Rh-பாசிட்டிவ் ஆகவும் இருந்தால், குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, இதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம்.
- தலசீமியா போன்ற நோய்கள் ஒரு கடுமையான இரத்தக் கோளாறு காரணமாக ஏற்படக்கூடியவை. பெற்றோர் இருவரும் தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைக்கு மேஜர் தலசீமியா ஏற்பட 25% வாய்ப்பு உள்ளது. இது குழந்தைக்கு ஆபத்தானது. இந்தப் பரிசோதனையின் மூலம் இதைக் கண்டறியலாம்.
- இரத்த சோகை பிரச்னை ஒரு மரபணு இரத்தக் கோளாறு மூலம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது திருமணத்திற்கு முன் செய்துகொள்ளும் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
- பரவும் நோய்த்தொற்றுகளான எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, சிபிலிஸ், கோனோரியா போன்ற தொற்றுகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம்.
- திருமணத்திற்கு முன் அனைவரும் பொது மருத்துவ பரிசோதனை அவசியம். இதன் மூலம் இரத்த சோகை, நீரிழிவு நோய், சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு போன்றவை குறித்து அறிந்துகொள்ள முடியும்.
திருமணத்திற்கு முந்தைய இரத்த பரிசோதனையின் நோக்கம், எதிர்கால குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும், தம்பதியினருக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான திருமண வாழ்க்கையை உறுதி செய்வதுமாகும். இது எந்த ஆபத்தையும் முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. அதை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.