Thug Life: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்ஹாசன்.. தக் லைஃப் படத்துக்கு தடை!

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தின் கர்நாடக வெளியீட்டுக்கு அவரின் சர்ச்சைக்குரிய கருத்தால் தடை ஏற்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) இந்தத் தடையை விதித்துள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் பிரச்சனை விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thug Life: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்ஹாசன்.. தக் லைஃப் படத்துக்கு தடை!

கமல்ஹாசன்

Updated On: 

30 May 2025 17:33 PM

கன்னட மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக, கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்ட நிலையில் இந்த சம்பவம் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பட ரிலீசுக்கு இன்னும் ஒருவாரம் இருக்கும் நிலையில் விரைவில் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தக் லைஃப். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் 2025 ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சர்ச்சையை கிளப்பிய கமல் பேச்சு

இப்படியான நிலையில் 2025, மே 24ஆம் தேதி தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், உயிரே உறவே தமிழே என தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து சிவராஜ்குமாரை சுட்டிக்காட்டி, கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து பிறந்தது என்பதற்காகத்தான் தமிழில் வணக்கம் சொன்னதாகவும் தெரிவித்தார்.

இது அந்நிகழ்ச்சியில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கமலின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் வரலாறு தெரியாமல் பேசுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவே கண்டனம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுத்த கமல்.. தக் லைஃப் படத்துக்கு தடை


கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். தக் லைஃப் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் சிவராஜ்குமார் விளக்கம் அளித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நினைத்தார். இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் கேரளாவில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இந்த சர்ச்சைக்கு பதில் அளித்தார். அப்போது தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், மொழியை பற்றி பேச எந்த அரசியல்வாதிகளுக்கும் தகுதி கிடையாது என காட்டமாக பதில் அளித்தார்.

இப்படியான நிலையில் 2025 மே 30ஆம் தேதிக்குள் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் கமல் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்ததால் கண்டிப்பாக இந்த படம் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் பிரதிநிதியான சாரா கோவிந்து கன்னட சார்பு அமைப்புகளின் கோரிக்கைகளுக்காக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.