OTT Movies: தொடர் கொலைகள்.. திணறும் போலீஸ்.. இந்த படம் மிஸ் பண்ணாம பாருங்க!
Best Thriller Movies in OTT: "தி குட் நர்ஸ்" திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை குற்றச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மருத்துவமனையில் நோயாளிகளின் தொடர் மரணம், செவிலியரான ஆமி மற்றும் சார்லஸ் கல்லன் ஆகியோர் சிக்குவதையும், பின் உண்மை குற்றவாளிகள் யார் என்பது வெளிச்சத்திற்கு வருவதையும் விவரிக்கிறது.

The Good Nurse படம்
எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறுவது நிதர்சனமான ஒன்றாகும். உண்மை சம்பவம் பற்றி முன்னரே அறிந்திருந்தாலும் அதனை எப்படி திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற ஆவல் நம்மை அப்படத்திற்குள் ஈர்க்கும். அப்படியாக 2022 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம் தான் “The Good Nurse”. இந்த படமானது கடந்த 2013 ஆம் ஆண்டு சார்லஸ் கிரேபர் கைவண்ணத்தில் அதே பெயரில் வெளியான உண்மையான குற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
டோபியாஸ் லிண்ட்ஹோம் இயக்கிய இப்படத்திற்கு கிறிஸ்டி வில்சன்-கெய்ர்ன்ஸ் ஆகியோர் திரைக்கதை எழுதியிருந்தனர். ஜெசிகா சாஸ்டெய்ன், எடி ரெட்மெய்ன், நம்டி அசோமுகா,நோவா எம்மெரிச், கிம் டிக்கன்ஸ், மாலிக் யோபா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை நாம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதை
2003 ஆம் ஆண்டில் இந்த படத்தின் கதை நடைபெறுவதாக காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பார்க்ஃபீல்ட் மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆமி லௌக்ரென் செவிலியராக பணியாற்றுகிறார். ஒற்றை தாயாக இருக்கும் இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது வெளியே தெரிந்தால் தான் பணி நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளார்.
சுகாதார காப்பீடு கிடைக்க இன்னும் 4 மாதங்கள் பணியாற்ற வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகிறது. இதனிடையே இரவு பணிக்கு சார்லஸ் கல்லனும், ஆமி லௌக்ரெனும் நியமிக்கப்படுகிறார்கள். இருவரும் நண்பர்களாக மாறுகிறார்கள். இவர்கள் கண்காணிப்பில் இருக்கும் அனா மார்டினெஸ் என்பவர் உயிரிழக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் இது இயற்கையான மரணம் என சொல்லப்படுகிறது.
ஆனால் ஒரு கட்டத்தில் இந்த மரணத்தில் சார்லஸ்க்கு சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது. இதன் விசாரணை பின்னணியில் கிட்டதட்ட 28 நோயாளிகளை அவர் கொலை செய்தது தெரிய வருகிறது. அவர் எப்படி இந்த கொலைகளை யாருக்கும் தெரியாமல் செய்தார், ஏன் செய்தார், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்ன என்பதே இப்படத்தின் கதையாகும்.
ஆமி லௌக்ரெனாக ஜெசிகா சாஸ்டெய்னும், சார்லஸ் கல்லனாக எடி ரெட்மெய்னும் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றிய பிற தகவல்கள்
The Good Nurse படம் 2022 ஆம் ஆண்டு 47வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டர்களிலும், 26 ஆம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியானது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. Netflix தளத்தில் அதிகம் பேர் ஒரே நாளில் பார்த்த படம் என்ற சிறப்பை இப்படம் கொண்டுள்ளது. வாய்ப்பிருந்தால் பார்த்து மகிழுங்கள்