வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து மீண்டும் வெங்கி அட்லூரியுடன் கூட்டணி வைத்த ஜி.வி.பிரகாஷ் குமார்
Suriya 46 Movie: தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவராக இருக்கும் வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவின் 46-வது படத்தை இயக்க கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில் முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri) தற்போது நடிகர் சூர்யாவின் 46-வது படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாக ரெட்ரோ படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துகொண்டபோது நடிகர் சூர்யா அறிவித்தார். முன்னதாக வதந்திகள் பரவியபோதே ரசிகர்கள் இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் 46-வது படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சூர்யாவின் 46-வது படத்திற்கான பூஜை நடைப்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் வெங்கி அட்லூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நடிகை மமிதா பைஜூ இந்தப் படத்தி இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் டூ இயக்குநர் வெங்கி அட்லூரி:
இயக்குநர் வெங்கி அட்லூரி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சினேக கீதம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு வரை எழுத்தாளராகவே சினிமாவில் பயணித்தார். பின்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியான தோளி பிரேமா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் படங்களை இயக்கி வந்தார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
வாத்தி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக வெங்கி அட்லூரி:
இயக்குநர் வெங்கி அட்லூரி தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் படங்களை இயக்கி வந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படம்:
இயக்குநர் வெங்கி அட்லூரி இறுதியாக தெலுங்கு சினிமாவில் லக்கி பாஸ்கர் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்தார். இவருக்கு நாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
தெலுங்கு மொழியில் படம் உருவாகி இருந்தாலும் பான் இந்திய மொழிகளில் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.