Bison Review: சாதித்தாரா துருவ்?.. பைசன் படத்தின் விமர்சனம் இதோ!
Bison Movie Review in Tamil: மாரி செல்வராஜின் 'பைசன்' திரைப்படம் இன்று வெளியாகி, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில், கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம், தென் தமிழகத்தின் சாதி அரசியல், வன்முறை மற்றும் ஒரு இளம் வீரனின் போராட்டத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தனது படைப்புகளால் தனித்துவமான தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக வெளியாகியிருக்கிறது “பைசன்”. இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தீபாவளி விருந்தாக பைசன் படம் இன்று (அக்டோபர் 17) திரைக்கு வந்துள்ளது. இப்படம் மூலம் மீண்டும் மண் மணம் சார்ந்த சமூக தாக்கத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படம் பிரபல தமிழக கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை
தென் தமிழகத்தில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வனத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கபடி வீரராக கிட்டன் (துருவ்) உள்ளார். ஒரு இளம் வயது பையனாக அந்த கிராமத்திற்குள் இருக்கும் வெறுப்பு நிறைந்த அரசியல் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிக் குடும்பத்தில் பிறந்ததால் ஏற்பட்ட அழுத்தம் போன்றவை காரணமாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ போராடுகிறார்.
Also Read: விக்ரம் சார் என்னிடம் சொன்ன விஷயம்; அவரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் ; மாரி செல்வராஜ் பேச்சு!
அந்த ஊரில் பாண்டியராஜா (அமீர்) மற்றும் கந்தசாமி (லால்) தலைமையிலான இரண்டு தனித்தனி பிரிவுகள் செயல்படுகின்றன. அவர்களை ஆதரிக்கும் மக்களும் வெறுப்பால் பிரிவினையை அனுபவிக்கின்றனர். இவர்களின் பழிவாங்கும் வடிவமாக கொலை மாறுகிறது. இதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்படையும் கிட்டன், வனத்தி கிராமத்தின் அரசியல் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் சாதி அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறான். கிட்டன் தனது கனவான இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதற்காக எத்தகைய போராட்டத்தை எதிர்கொள்கிறான், அதில் அவன் சாதித்தானா, ஒரு சமூக சூழல் எப்படியெல்லாம் ஒருவரை பின்னோக்கி இழுக்கிறது என்பதை வழக்கமான சாட்டையடி திரைக்கதை மூலம் மாரி செல்வராஜ் படைத்துள்ளார்.
வலுசேர்த்த பிரபலங்கள்
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சினிமாவுக்குள் நுழைந்த துருவ் விக்ரமுக்கு இது பெயர் சொல்லும் படமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அவரும், தந்தையாக வரும் பசுபதியும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். சாதி அநீதி முதல் சமத்துவமின்மை, ஒடுக்குமுறை வரை என அனைத்தையும் மாரி செல்வராஜ் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிட படமாக உருவாக்கியுள்ளார். அவர் சொல்ல வரும் செய்தி இன்றைய இளம் தலைமுறையினருக்கும் பொருந்தக்கூடியவையாக அமைந்துள்ளது.
லால், அமீர், ரஜிஷா விஜயன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர்களுக்கு வலு சேர்த்துள்ளனர். எனினும் அனுபமா பரமேஸ்வரனின் கதாபாத்திர வடிவமைப்பு பெரிய அளவில் ஈர்க்கவில்லை என சொல்லலாம். நிவாஸ் கே பிரசன்னா பாடல்களிலும். பின்னணி இசையிலும் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்க்கிறார். அதேபோல் எழில் அரசுவின் கேமரா கிராமத்தின் இயல்பு, வன்முறை, இறை வழிபாடு என அனைத்தையும் நம்முள் கடத்தும் வண்ணம் இருக்கிறது.
Also Read: இது இளம் ஹீரோக்களின் தீபாவளி.. ஒரே நாளில் வெளியாகும் டாப் 5 படங்கள்.. என்னென்ன தெரியுமா?
படம் முழுவதும் சொல்ல வந்ததை ரசிகருக்குள் கடத்துகிறதா என்றால் இல்லை என சொல்லலாம். திரைக்கதையில் சற்று தடுமாறினாலும் சொல்ல வந்ததை அழுத்தமாக தடம் மாறாமல் செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். பைசன் திரைப்படம் கோபம் நிறைந்த உலகத்திற்கு எதிர்விளைவுகளை அறியாமல் வருபவர்களை வன்முறை எப்படி உள்ளே இழுத்து வாழ்க்கையை சிதைக்கும் என்பதை கண்ணாடியாக பிரதிபலிக்கிறது. கண்டிப்பாக தியேட்டரில் குடும்பத்துடன் தீபாவளிக்கு காண வேண்டிய படமாக பைசன் அமைந்துள்ளது என சொல்லலாம்.