தெலுங்கு நடிகரை இயக்குவதாக வெளியான வதந்தி… இயக்குநர் மணிரத்னம் விளக்கம்
இயக்குநர் மணிரத்னம் தற்போது தமிழில் தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாக வதந்திகள் பரவியது. இது குறித்து இயக்குநர் மணிரத்னம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பலருக்கு ரோல் மாடலாக விளங்குபவர் இயக்குநர் மணிரத்னம் (Director Mani Ratnam). தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள் பலர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் இயக்குநர் மணிரத்னம் தற்போது நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசனை முன்னணி நாயகர்களாக வைத்து இயக்கியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பான் இந்திய அளவில் அதிக திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழு இதன் ஓடிடி வெளியீட்டு 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு நடிகரை இயக்குகிறாரா மணிரத்னம்?
இந்த நிலையில் தக் லைஃப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் ஒரு ஃபீல் குட் காதல் கதையை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவியது. மேலும் அந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாகவும் மற்றும் நடிகை ருக்மணி வசந்த் நாயகியாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவியது.
தற்போது தக் லைஃப் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போட்டர் செய்திக்கு பேட்டியளித்தார். அப்போது மணிரத்னத்திடம் இந்த திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிரத்னம் அப்படி எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இரண்டு கதைகளை எழுதியுள்ளதாகவும் அதில் எதை எடுப்பேன் எதை விடுவேன் என்பது குறித்து தற்போது என்னாலே முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் காதல் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்த மணிரத்னம் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை தான் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு முழு நீள காதல் கதையை நீங்கள் உருவாக்க முடியாது என்று தெரிவித்த மணிரத்னம் அது அந்த காலத்திற்கும் அந்த சூழலுக்கு ஏற்ற ஒன்றாக இருக்க வேண்டும். தொடர்ந்து பேசிய மணிரத்னம் அது ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமல்ல, அதற்கும் மேலானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக சினிமா வட்டாரங்களில் உலா வந்த மணிரத்னம படம் குறித்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தெலுங்கு பட நடிகரை இயக்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.