சாணி அள்ளிய கையால் தேசிய விருது.. நித்யா மேனன் பகிர்ந்த நினைவுகள்!
நடிகை நித்யா மேனன் தனது தேசிய விருது வெற்றிக்கு முந்தைய நாள் மாட்டுச் சாணம் அள்ளிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். "இட்லி கடை" படப்பிடிப்பின் போது இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும், கிராமப்புற வாழ்க்கையின் அழகையும், அது தனக்குத் தந்த அனுபவத்தையும் பற்றி நேர்காணலில் கூறியுள்ளார்.

தான் தேசிய விருது பெற்றதுக்கு முதல் நாள் நடந்த சம்பவம் குறித்து நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அவர், இன்றைய காலக்கட்டத்தில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். காஞ்சனா 2, ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, மெர்சல், காதலிக்க நேரமில்லை என பல படங்களில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் 2025, ஜூலை 25 ஆம் தேதி நித்யா மேனன் நடிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள “தலைவன் தலைவி” (Thalaivan Thalaivi) படம் ரிலீசாகவுள்ளது. இதனை முன்னிட்டு அவர் பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.
மாட்டு சாணம் டூ தேசிய விருது
அதில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நித்யா மேனன், “இயற்கை எழில் நிறைந்த இடம், கிராமங்கள் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெறுவது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது. படப்பிடிப்பு இல்லையென்றால் இத்தகைய இடங்களுக்கு எப்படி செல்ல முடியும் என நினைப்பேன். அதனால் தலைவன் தலைவி மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்கள் நடிக்கும் போது மிகப்பெரிய அனுபவங்கள் நடந்தது” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம், “கிட்டதட்ட 6,7 மாதங்கள் இரண்டு படங்களுக்காகவும் கிராமத்து பெண்ணாகவே மாறியிருப்பீர்கள், வெளித்தோற்றம் தவிர்த்து அனுபவமாக எப்படி இருந்தது” என கேட்கப்பட்டது.




Also Read: Entertainment News Live Updates: கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..
அதற்கு, “வாழ்க்கை என்பது அனுபவமாக இருக்க வேண்டும். எந்த அளவு நாம் பார்க்கிறோமோ அந்த அளவு இருக்க வேண்டும். அந்த அனுபவம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக இட்லி கடை படத்திற்கு நான் மாட்டு சாணம் வெறும் கைகளால் அள்ளியிருக்கிறேன். என்னிடம் வெறும் கைகளால் செய்ய முடியுமா என கேட்டார்கள். அதை எப்படி செய்ய வேண்டும் எனக்கு முதல்முறையாக கற்றுக் கொடுத்தார்கள்.
நான் திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருது வாங்க செல்வதற்கு முதல் நாள் இந்த சாணம் அள்ளும் காட்சி படமாக்கி கொண்டிருந்தார். முதல் நாள் சாணம் அள்ளிய அந்த கை தான் மறுநாள் விருதை வாங்கியது. அது ஒரு மிகப்பெரிய உணர்வு தருணம் என சொல்லலாம். நாம் வாழ்க்கையில் ஒரே மாதிரியாக இருக்காமல் இப்படி மாறி மாறி இருப்பது சிறந்தது தான்” என நித்யா மேனன் கூறியுள்ளார். மேலும் எனக்கு தனிப்பட்ட முறையில் நகரத்தை விட கிராமங்கள் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Also Read: Coolie : கூலி படத்தில் சௌபின் சாஹிர் ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் இவரா?
தலைவன் – தலைவி படம்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு, சரவணன், ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா சங்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “தலைவன் தலைவி”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.