தவெக வருகையால் திமுக வாக்கு வங்கி பாதிக்கும் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடுகளின் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியிருந்த டி.டி.வி. தினகரன், தற்போது பங்காளி சண்டைகள் தீர்ந்து விட்டதாகக் குறிப்பிட்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தச் சூழலிலேயே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தவெக வருகையால் திமுக வாக்கு வங்கி பாதிக்கும் - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..

கோப்பு புகைப்படம்

Published: 

09 Feb 2026 10:12 AM

 IST

பிப்ரவரி 9, 2026: வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக பாதிக்கப்படும் என்றும், அந்த வாக்குகள் அனைத்தும் த.வெ.க.விற்கு செல்லும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், திமுக மீண்டும் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே சமயம், அதிமுக இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: சாலையில் கிடந்த 20 பவுன் நகை..நேர்மை தவறாமல் தூய்மை பணியாளர் செய்த செயல்..திருவாரூரில் நெகிழ்ச்சி!

2026 சட்டமன்ற தேர்தல்:

இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றமின்றி அதே கூட்டணி தொடர்ந்து வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில், அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இதில், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் தற்போது வரை தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் அதன் முதல் தேர்தல் களமாகும். முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கும் சூழலில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் ஆலோசனைக் கூட்டங்கள், மற்றொரு பக்கம் மாநாடுகள், மேலும் தேர்தலுக்கான பணிகள் என பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: ஒரே நாளில் 8 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட்…47 பேர் பணியிட மாற்றம்…கள்ளக்குறிச்சியில் அதிரடி நடவடிக்கை!

தவெக வருகையால் திமுக வாக்கு வங்கி பாதிக்கும்:

தற்போது விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக பாதிக்கப்படும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “2006 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது பெரிய தாக்கம் ஏற்பட்டது. அந்த தாக்கம் தற்போதும் இருக்கும். அது முக்கியமாக திமுகவின் வாக்குகளை பாதிக்கும். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது” என குறிப்பிட்டார்.

டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்கு பதிலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடுகளின் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியிருந்த டி.டி.வி. தினகரன், தற்போது பங்காளி சண்டைகள் தீர்ந்து விட்டதாகக் குறிப்பிட்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தச் சூழலிலேயே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்