த.வெ.க கட்சிக்கு எழுந்த புதிய சிக்கல்.. ஆட்டோ சின்னம் இல்லையாம்.. புதிய சின்னம் தேர்வு செய்ய முனைப்பு..
TVK Symbol In Election: தமிழக வெற்றிக் கழகம் அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், அதில் எந்த சின்னம் பெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் தவெக தரப்பில் விசில் சின்னம் பெற கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம், ஆகஸ்ட் 23, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் எந்த சின்னத்தைப் பெறும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத மொத்தம் 184 சின்னங்கள் பட்டியலில் உள்ளன. அதில் 182வது இடத்தில் உள்ள விசில் சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் கேட்டு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் 2024 பிப்ரவரி மாதம் விஜயால் தொடங்கப்பட்டது. கட்சித் தொடக்கத்திலேயே 2026 சட்டமன்றத் தேர்தல் தான் அதன் முதன்மை இலக்கு என தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான்கு முனைப்போட்டி நிலை
தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக, தமிழக வெற்றிக்கழகமும் தனது அமைப்பை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் மதுரையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. “கூட்டணியாக இருந்தாலும் சரி, தனித்துப் போட்டியிட்டாலும் சரி, 2026 தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகத்திற்கே நேரடி போட்டி” என விஜய் தொடர்ந்து கூறி வருகிறார்.
மேலும் படிக்க: திக்குமுக்காடச் செய்த மதுரை மாநாடு – த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை..
ஆட்டோ சின்னம் பெறுவதில் சிக்கல்:
முதலில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்டோ சின்னம் பெறும் என தகவல் வெளியானது.
ஆனால் தற்போது அதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மட்டுமே உள்ளது. அதனால், யாருக்கும் ஒதுக்கப்படாத சின்னங்களில் ஒன்றை மட்டுமே பொதுச் சின்னமாகத் தேர்வு செய்ய முடியும். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் ஆட்டோ சின்னம் பெற்று, பல இடங்களில் வெற்றி பெற்றனர்.
மேலும் படிக்க: குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்படும் மத்திய அரசு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..
ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் ஆட்டோ சின்னம் இடம்பெறவில்லை. இதற்குக் காரணம், கேரளா காங்கிரஸ் என்ற கட்சி, மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, ஆட்டோ சின்னம் ஏற்கனவே அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதே ஆகும். இதனால், தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆட்டோ சின்னம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
விசில் சின்னம் பெற தீவிரம் காட்டும் த.வெ.க:
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 184 ஒதுக்கப்படாத சின்னங்களில் லேப்டாப், தொலைக்காட்சி, பேட், விசில் போன்றவை இடம் பெற்றுள்ளன. அதில், குறிப்பாக 182வது இடத்தில் உள்ள விசில் சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே தலைவர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் விசில் முக்கிய சின்னமாக இருந்தது, மேலும் அந்தப் படம் மாபெரும் வெற்றியையும் பெற்றது.
இதனை கருத்தில் கொண்டு, விசில் சின்னமே பொதுமக்களிடம் எளிதில் சென்றடையும் என கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர். அதனால், தமிழக வெற்றிக்கழகம் விசில் சின்னம் பெறுவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற்றால், தமிழக வெற்றிக்கழகத்திற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் வழங்கப்படும். அப்போது தங்களுக்கான அதிகாரப்பூர்வ பொதுச் சின்னத்தை கேட்டு பெறும் வாய்ப்பு கிடைக்கும்.