Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திக்குமுக்காடச் செய்த மதுரை மாநாடு – த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை..

TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தியில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இந்த மாநாட்டை வெற்றியடைய செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி என தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

திக்குமுக்காடச் செய்த மதுரை மாநாடு – த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை..
தலைவர் விஜய்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Aug 2025 20:07 PM

சென்னை, ஆகஸ்ட் 23, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் நடைபெற்ற மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், “பல தடைகள் கடந்தும் இந்த மாநாடு வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக 2024ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு, அந்தக் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடைபெற்றது. முதல் மாநாடு அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இரண்டாவது மாநாடு – மதுரை:

அந்த தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தலைவர் விஜயின் மேடைப்பேச்சு தேர்தலை ஒட்டி இருந்தது. குறிப்பாக, “234 தொகுதியிலும் விஜய் தான் போட்டியிடுகிறார் என்று நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றும், “கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்படும் மத்திய அரசு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

மதுரை மாநாடு – கோடான கோடி நன்றி:


மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “விக்கிரவாண்டி விசாலையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு — ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்னை நெகிழ வைத்தது. ஆனால், மதுரையில் நிறைவுற்றிருக்கும் இரண்டாவது மாநில மாநாடு — ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.
இந்த அளவு பேரன்பு காட்டும் உங்களை என் உறவுகளாகப் பெற என்ன தவம் செய்தேனோ?
கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கோடான கோடி நன்றி.”

மதுரையின் வரலாற்று பெருமை:

மேலும், “சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், சத்திய நீதி காத்த மதுரையில், உரிமை காக்கும், உறவு காக்கும் மதுரையில், நம் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் பங்களிப்பும்தான் காரணம்” என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்.. ரூ. 20 லட்சத்துக்கான காசோலை வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

மக்கள் வெள்ளம் – கடல்போன்ற காட்சி:

“மதுரையில் கடல் வந்து புகுந்தது போல இருந்தது நம் மாநாட்டுக் காட்சி. கபட நாடக மற்றும் பிளவுவாத சக்திகளை, அரசியல் மற்றும் கொள்கை அளவில் நின்று உறுதியாக நாம் எதிர்த்ததை, கடல்கள் சேர்ந்து கை தட்டியதைப் போல மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றனர். அந்தக் காட்சி கல்வெட்டாக மனதில் பதிந்துள்ளது.

இது நம் அரசியல் மற்றும் கொள்கை வழிப் பயணத்தை இன்னும் ஆழமாகவும், அகலமாகவும், அடர்த்தியாகவும் ஆக்கியுள்ளது. இனி அதை சற்றும் சமரசமின்றி செய்வோம்.
அதனை உறுதிப்படுத்த, ‘செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி’ என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.” என்றும் விஜய் வலியுறுத்தினார்.