புதுச்சேரி தேர்தல் 2026.. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி.. தவெகவை வளைக்கப் போட்டா போட்டி!!
Puducherry Assembly Elections 2026: தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை, புதுச்சேரியில் தங்களது பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரு தரப்புமே தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோப்புப் புகைப்படம்
Puducherry Polls 2026: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய பின்பும் முக்கியக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. வரும் 23ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. புதுச்சேரி திமுக – காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது. இதனால், இரு கட்சிகளும் தங்களது முடிவை மாற்றுவது குறித்தி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: நாதக ஆட்சியில் அனைவருக்கு அரசு வேலை… அதிரடியான தேர்தல் வாக்குறுதி… சீமான் வெளியீட்டார்!
திமுக – காங்கிரஸ் இடையே திருப்பம்:
திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. திமுக தரப்பில் ஜெகத்ரட்சகன் எம்.பி-யும், காங்கிரஸ் தரப்பில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 30 தொகுதிகளில், திமுக சரிபாதியாக 15 இடங்களைக் கோரிய நிலையில், காங்கிரஸ் 12 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்தது.
தவெகவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் விருப்பம்:
இந்த இழுபறியால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யத் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலியார்பேட்டை தொகுதியில் திமுக எம்.எல்.ஏ சம்பத் நேற்று தனது மனுவைத் தாக்கல் செய்தார். இதற்கிடையே, கிரிஷ் சோடங்கர் டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்திக்க உள்ளதாகவும், அங்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் சிக்கல்:
மறுபுறம் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியிலும் சிக்கல் எழுந்துள்ளது. மார்ட்டின் மகனின் லட்சிய ஜனநாயகக் கட்சியைப் கூட்டணியில் இணைக்க பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், முதல்வர் ரங்கசாமி இதற்கு முரண்படுவதால் அங்கும் தொகுதிப் பங்கீடு முடிவடையாமல் உள்ளது. இந்தநிலையில் ரங்கசாமி, தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளார்.
தவெக-வுடன் கூட்டணி அமைக்க போட்டி:
தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை, புதுச்சேரியில் தங்களது பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரு தரப்புமே தீவிரம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக தவெக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ
2021 தேர்தல் ஒரு பார்வை:
கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் திமுக 6 இடங்களைப் பிடித்த நிலையில், காங்கிரஸால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டு 10-லும், பாஜக 9 இடங்களில் போட்டியிட்டு 6-லும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் கட்சிகள் மாற்று முடிவுகளை எடுக்கத் தயாராகி வருவதால், புதுச்சேரி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.