தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம்.. பிரம்மாண்ட ரோடு ஷோ.. பக்கா பிளானுடன் புதுச்சேரி வரும் பிரதமர் மோடி!
PM Modi Visit Puducherry : பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3- ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்துக்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை
புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய என். ஆர். காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 சட்டமன்ற தொகுதிகள், பாரதீய ஜனதா கட்சிக்கு 10 சட்டமன்ற தொகுதிகள், அதிமுகவுக்கு 2 சட்டமன்ற தொகுதிகள், லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் என புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி
இந்த நிலையில், இந்த வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதற்காக ஏப்ரல் 3- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அப்போது, புதுச்சேரி நகரப் பகுதியில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை தொடர்ந்து, நடைபெறும் நிகழ்வில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார். மேலும், அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: விஜய் பிரச்சாரம் செய்யலாம் – தேர்தல் ஆணையம் அனுமதி
தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்
இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வருகிற மார்ச் 27- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதி நபின், முன்னாள் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா ஆகியோர் அடுத்தடுத்து வருகை தர உள்ளனர். இவர்கள், தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையின் போது, தமிழகத்துக்கும் அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது. அங்கேயும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்பு
ஆனால், தற்போது வரை தமிழக வருகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார். இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்காலில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி இருந்தார். தற்போது, 2- ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார்.
மேலும் படிக்க: கமலின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டுக்கு அனுமதி – மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை