Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்கும் மதிமுக, விசிக.. அழுத்தத்தில் திமுக?

Assembly Election 2026: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக மற்றும் விசிக கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்கும் மதிமுக, விசிக.. அழுத்தத்தில் திமுக?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jun 2025 13:02 PM IST

2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகள் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் (Dravida Munnetra Kazhagam) தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்றொரு பக்கம் திமுக அரசு எப்படியாவது க்விழ்க்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களை இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தரப்பில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தற்போது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இருக்கக்கூடிய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாக உள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் டிசம்பர் மாதம் தான் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவும் கூட்டணி கட்சிகளும்:

இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என உறுதிப்பட தெரிவித்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. இதில் இருக்க கூடிய கூட்டணி கட்சிகள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிலிருந்து விலகுவதாக பல்வேறு கட்ட தகவல்கள் வெளியானது. தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தலைவர் விஜய் பேசுகையில் மறைமுகமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய தீர்மானமான கூட்டணி ஆட்சி என்பதை முன்வைத்து மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் திமுக கூட்டணியில் தான் தொடரப்போவதாகவும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற எந்த அவசியமும் இல்லை அதற்கான எண்ணமும் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதிக இடங்களை கேட்கும் கூட்டணி கட்சிகள்:

இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் தேர்தல் சந்திக்க உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அதிக தொகுதியை கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, “ 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் மட்டுமே பெற்றதில் விசிக கட்சியினருக்கு வருத்தம் தான். வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். விசிக தலைவர் திருமாவளவனிடமும் இதனை பற்றி வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

மேலும் கடைநிலை தொண்டர் வரை அனைவரின் விருப்பமும் இதுவே ஆகும் சுமார் 50 தொகுதிகள் போட்டியிடக்கூட எங்களுக்கு விருப்பம் உள்ளது என அவர் பேசியிருந்தது தற்போது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அழுத்தத்தில் திமுக?

இது ஒரு பக்கம் இருக்க மதிமுக தரப்பிலும் கூடுதல் தொகுதிகளை கேட்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற ஏதுவாக கூடுதல் தொகுதிகளை கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுக இம்முறை கூடுதல் தொகுதிகள் கேட்கும் என தெளிவாகியுள்ளது. வீசிக தரப்பில் 50 இடங்களும், மதிமுக தரப்பில் கூடுதல் இடங்களும் கேட்கப்படுவது திமுகவை அழுத்தத்தில் தள்ளுவதாக அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலை எப்படி சந்திப்பது, மக்களுக்கான தேவை என்ன, மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை, பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது என பல்வேறு கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக தரப்பில் இன்னும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகவில்லை என்பதை நிதர்சனம்.