அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்.. திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி..
Anwar Raja Pressmeet: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நிச்சயமாக மு க ஸ்டாலின் அவர்கள் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என பேசியுள்ளார்.

அன்வர் ராஜா
சென்னை, ஜூலை 21, 2025: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான அன்வர் ராஜா அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் . அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவர் அதிமுகவிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதலே அதிமுகவில் முக்கிய பங்காற்றி வருபவர் அன்வர் ராஜா. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் காலூன்று துடிப்பது பாஜகவின் எண்ணம், அது ஒரு காலத்திலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் அல்லது விலகுவார் என பல்வேறு யூகங்கள் வெளியானது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா:
இதனை அடுத்து இன்று அதாவது 2025, ஜூலை 21ஆம் தேதி திமுகவில் இணைவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றிருந்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டிருந்தார். இது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் – அன்வர் ராஜா:
தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. திராவிட இயக்க கொள்கைகள், மாநில சுயாட்சி, நம் மொழியை காப்பாற்றக்கூடிய தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார். திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார்.… pic.twitter.com/hBZbb9q2bp
— DMK IT WING (@DMKITwing) July 21, 2025
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நிச்சயமாக மு க ஸ்டாலின் அவர்கள் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக மக்கள் ஒரு கட்சியின் தலைவரை வைத்துதான் வாக்களிக்கிறார்கள். 1971 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதியும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்ததால் மிகப்பெரிய வெற்றியை அடைந்தனர். அதனை தொடர்ந்து பார்த்தோம் என்றால் ஒன்று ஜெயலலிதா தலைமையில் மக்கள் வாக்களிப்பார்கள், இல்லை என்றால் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் மக்கள் வாக்களிப்பார்கள்
ஆகவே ஒரு தலைவரின் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை வைத்து தான் இன்று ஆட்சி அமைகிறது. தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இணையான தலைவர் இருக்கிறாரா என கேட்டால் கிடையாது. நிச்சயமாக 15 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஆட்சியை அமைப்பார். மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
மாநில சுயாட்சியை காப்பாற்றுகின்ற இயக்கம்:
எனவேதான் திராவிட கொள்கைகளை காப்பாற்றுகின்ற, மாநில சுயாட்சியை காப்பாற்றுகின்ற, மொழியை காப்பாற்றுகின்ற, நம் தன்னுடைய இனத்தை காப்பாற்றுகின்ற, திமுகவுடன் இணைந்துள்ளேன் நம்முடைய சமுதாயத்திற்கு ஆபத்து வரும் பொழுது மத்திய அரசோடு போராடிக் கொள்வது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திற்கு இன்று தீர்ப்புகளை வாங்கி இந்தியாவிற்கு மிகப்பெரிய உதாரணமாக இருக்கும் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான்
அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதி பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கூர்மை படுத்தியதும் முதலமைச்சர் ஸ்டாலின். இப்படிப்பட்ட முதலமைச்சர் தான் மீண்டும் வரவேண்டும் என மக்கள் நினைப்பார்கள்” என பேசி உள்ளார்.