”கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கவே எடப்பாடி அழைக்கிறார், வேறு எந்த காரணமும் இல்லை” – திருமாவளவன் திட்டவட்டம்..

Thirumavalavan: எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு என்பது கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான முயற்சி தவிர அதில் வேறு எந்த உண்மையையும் இல்லை. நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி மதசார்பற்ற கூட்டணி அதனை வலுப்பெற செய்வதும் வெற்றி பெற செய்வதும் கூட்டணியில் உள்ள அனைவரின் கடமை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

”கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கவே எடப்பாடி அழைக்கிறார், வேறு எந்த காரணமும் இல்லை” - திருமாவளவன் திட்டவட்டம்..

கமலை சந்தித்த திருமாவளவன்

Published: 

18 Jul 2025 06:46 AM

சென்னை, ஜூலை 18, 2025: மாநிலங்களவை உறுப்பினராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திமுகவை சேர்ந்த பி வில்சன், எம் சண்முகம், முகமது அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இவர்களுக்கு மாற்றாக அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், திமுக சார்பில் கவிஞர் சல்மா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சிவலிங்கம், பி வில்சன் உள்ளிட்டோர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன்:

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக 2024 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இல்லை எனவும் தெளிவுபடுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என அப்போது முதலே பேசப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து இம்முறை கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருமாவளவனை கட்டியனைத்த கமல்ஹாசன்:


மாநிலங்களவை உறுப்பினர் உறுப்பினராக இன்னும் சில நாட்களில் பதவி ஏற்க இருக்கும் கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விசிக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன், கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய மக்கள் நீதி மையம் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது திருமாவளவனை கட்டி அணைத்து வாழ்த்து பெற்றார்.

Also Read: ‘கூட்டணி ஆட்சி தான்… 3 முறை அமித் ஷா சொல்லிவிட்டார்’ அண்ணாமலை பேச்சு!

விசிக நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு:

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அங்கமாக இணைந்து இயங்கி வருகிறார் கமல்ஹாசன். வரும் 25ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார். 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி எனது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

அதற்கு அவர் வருவதாக கூறியுள்ளார். தேசிய அளவில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் மதசார்பின்மை காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர். அதனால் தான் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கமாக இயங்கி வருகிறார். அந்த அடிப்படையில் தான் கமல்ஹாசனின் பேச்சு மாநிலங்களவையில் இருக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ‘சர்ச்சை வேண்டாம்.. வீண் விவாதங்களை தவிர்ப்போம்’ காமராஜர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

திமுக கூட்டணி வலுவாக உள்ளது:

தொடர்ந்து பேசிய அவர், “ இருவரும் இணைந்து செயல்படுவதற்கான தேவை என்ன இருக்கிறது என்பது குறித்து பேசப்பட்டது. 2026 தேர்தல் நெருக்கடியானதாக இருக்கும் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது ஆனால் இயல்பு அது அல்ல திமுக கூட்டணி வலுவாக உள்ளது. திமுகவை எதிர்க்கும் ஒரு கூட்டணி முழுமையாக உருவாகவில்லை. அதிமுக பாஜக இடையே முரண்பாடாக இன்னும் பேசிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கவே எடப்பாடி அழைக்கிறார்:

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு என்பது கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான முயற்சி தவிர அதில் வேறு எந்த உண்மையையும் இல்லை. நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி மதசார்பற்ற கூட்டணி அதனை வலுப்பெற செய்வதும் வெற்றி பெற செய்வதும் கூட்டணியில் உள்ள அனைவரின் கடமை. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமில்லை.இதுவரை தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலாக தான் இருந்துள்ளது இனிமேலும் அதுபோல்தான் நடக்கும் மூன்றாவது அணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை வரும் தேர்தலிலும் அப்படித்தான்” என பேசியுள்ளார்.