நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்..
DMK District Secretaries Meeting: 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாத காலங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு,க ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 13, 2025) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, ஆகஸ்ட் 13, 2025: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 7 மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் ஆளும் திமுக அரசு மற்றும் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகம் தரப்பில் உடன்பிறப்பே வா, ஓரணியில் தமிழ்நாடு உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீத உறுப்பினர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில், அது பின்னர் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் என்பது ஆகஸ்ட் 15 2025 ஆம் தேதி முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 13 2025 தேதியான இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதாவது தேர்தலை சந்திப்பது எப்படி, கள நிலவரம் எவ்வாறு உள்ளது, ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை நீட்டிக்க பரிந்துரை உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டது. அதேபோல் இந்த மாதம் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் லண்டன் மற்றும் ஜெர்மனி பயணம் மேற்கொள்கிறார். 10 நாள் பயணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இல்லாத நிலையில் கட்சி செயல்பாடுகள் குறித்தும் அவர் கலந்து ஆலோசித்தார்.
மேலும் படிக்க: கூலி படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் – உதயநிதி ஸ்டாலின்
முக்கிய தீர்மானங்கள்:
#DravidianModel அரசின் மக்கள் நலன் காக்கும் திட்டங்களும் – கழகத்தின் #ஓரணியில்_தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது!
இனி, நாம் மிக கவனமாக ஆற்ற வேண்டிய பணி – ‘பூத்’ அளவில் பா.ஜ.க. பிற மாநிலங்களில் செய்யும் #VoteTheft, #SIR போன்ற… pic.twitter.com/AoIox7W7Sl
— M.K.Stalin (@mkstalin) August 13, 2025
இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில்,
- சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத்திருட்டு” மற்றும் “SIR” (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனம்
- திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.
- கழகத் தலைவர் திராவிட நாயகர் கட்டளைப்படி, ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து – உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!
மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை – இப்போது மட்டுமல்ல – வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் – ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகமே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல – மதவெறி சக்திகளுக்கும் – அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது.