சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவில் திடீர் மாற்றம்? பிரேமலதா எடுத்த அதிரடி முடிவு!

Premalatha Vijayakanth : தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவில் திடீர் மாற்றம்? பிரேமலதா எடுத்த அதிரடி முடிவு!

சட்டமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் களமிறங்கவில்லையா?

Published: 

23 Mar 2026 12:16 PM

 IST

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என 5 முனை போட்டி நிலவி வருகிறது. இதில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் நிறைவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை தவிர மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளன. தொகுதி பங்கேட்டில் உடன்பாடு எட்டாத நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மட்டும் கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளது. இவ்வாறாக திமுக கூட்டணியின் நிலவரம் இருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு தற்போது வரை பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.

தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள்

ஆனால், இந்த கூட்டணியில் இணையும் போதே, 10 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்தியதுடன், அதற்கான பட்டியலையும் பிரேமலதா விஜயகாந்த் அளித்திருந்தார். அதன்படி, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்பட்டது. அதில், தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே. சுதீஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல, தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: K.N.Nehru Tamil Nadu Election: கே.என்.நேருவின் கோட்டையாக தொடருமா திருச்சி மேற்கு தொகுதி!

தேர்தலில் பிரேமலதா- விஜய பிரபாகரன் போட்டி

அதன்படி. விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதி அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் எனவும், இதே போல, விருதுநகர் அல்லது சாத்தூர் தொகுதியில் அவருடைய மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, தேமுதிக கட்சி ஆரம்பித்தது முதல் தற்போது வரை 21 ஆண்டுகளாக கட்சியில் உழைத்து வருபவர்களுக்கு எம்எல்ஏ மற்றும் எம்பி பதவி கிடைக்கவில்லை.

பிரேமலதா தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் செய்ய திட்டம்

அப்படி இருக்கும் நிலையில், பிரேமலதாவின் சகோதரர் எல். கே. சுதீஷ்க்கு எம்பி பதவியும், பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு எம்எல்ஏ பதவியும் அளிக்கப்பட்டால் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படும் என தலைமை கருதுவதாக தெரிகிறது. மேலும், விருகம்பாக்கம் தொகுதியில் பிரேமலதாவை போட்டியிடக் கோரி திமுக தலைமை வலியுறுத்தி வருகிறதாம். இதில், பிரேமலதாவுக்கு உடன் பாடு இல்லாத நிலையில், வருகின்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதை தவிர்த்து விட்டு திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுவே, தேமுதிக தலைமையின் தற்போதைய நிலவரமாக உள்ளதாம்.

மேலும் படிக்க: புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி.. முழு விவரம் இதோ!

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..