பொது இடங்களில் LED திரைகள்.. தயார் நிலையில் கான்வாய்.. விஜய் பதவியேற்பு சிறப்பு ஏற்பாடுகள் விவரம்!
தவெக ஆட்சி அமைக்கப் பல கட்சிகள் கரம் கோர்த்துள்ளன. அந்தவகையில், திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் மே 6ஆம் தேதி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் மதச்சார்பற்ற மற்றும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன.

விஜய் பதவியேற்பு மேடை
தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப்பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க வருமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். முன்னதாக, தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து, காங்கிரஸ், சிபிஎம் (CPM), சிபிஐ (CPI), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இன்று காலை 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மேலும், வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய கட்சிகள்:
தவெக ஆட்சி அமைக்கப் பல கட்சிகள் கரம் கோர்த்துள்ளன. அந்தவகையில், திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் மே 6ஆம் தேதி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் மதச்சார்பற்ற மற்றும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன. இதேபோல், இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் திமுக-வுடன் கூட்டணி தொடர்ந்தாலும், தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி அமைய தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது.
உத்தேச அமைச்சரவை மற்றும் துறைகள்:
புதிய அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட 9 அமைச்சர்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்துள்ள உத்தேசப் பட்டியலின் படி, விஜய் (முதலமைச்சர்): பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை. என். ஆனந்த்: நகராட்சி நிர்வாகத் துறை. செங்கோட்டையன்: பொதுப்பணித் துறை. நிர்மல் குமார்: மின்சாரத் துறை. வெங்கட் ரமணன்: பள்ளிக் கல்வித் துறை. அருண் ராஜ்: வணிகவரித் துறை. ஆதவ் அர்ஜுனா: விளையாட்டு மேம்பாடு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை. ராஜ்மோகன்: ஆதி திராவிடர் நலத்துறை. முஸ்தபா: சிறுபான்மையினர் நலத்துறை.
முதல் கையெழுத்து எதில்?
தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் எது முதலில் நிறைவேற்றப்படும் என்ற ஆவல் மக்களிடையே எழுந்துள்ளது. ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள். 200 யூனிட் இலவச மின்சாரம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை. இலவசப் பேருந்து பயணம்.
இந்த நான்கு முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் விஜய் எதில் முதல் கையெழுத்திடுவார் என்பது இன்று மதியம் தெரியவரும்.
நேரடி ஒளிபரப்பு வசதிகள்:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். பொதுமக்கள் வசதிக்காகச் சென்னை மாநகராட்சியின் முக்கிய 20 இடங்களில் (மெரினா, அண்ணா நகர், கோயம்பேடு, சென்ட்ரல் உள்ளிட்ட இடங்கள்) பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மூலம் விழா நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்பது, மாநில அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விஜய் முதல்வராகப் பதவியேற்பதையொட்டி, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரது இல்லத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் ஏராளமான காவலர்கள் வீட்டின் நுழைவு வாயில் மற்றும் சாலை நெடுகிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடுப்புகள் (Barricades) அமைக்கப்பட்டுப் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் சீர்செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய பிரமுகர்கள் வருகை:
அதிகாலை முதலே விஜய் அவர்களின் இல்லத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரத் தொடங்கினர். பல முக்கிய பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் வந்து விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துச் செல்வதை வீடியோவில் காண முடிகிறது. விஜய் வீட்டின் முன்புறம் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்குப் புறப்படுவதற்கு முன்னதாக, அவரது இல்லத்தில் வழக்கமான உற்சாகமும் சுறுசுறுப்பும் காணப்பட்டது.