ஜே.பி நட்டாவை சந்தித்து இதுதான் பேசினேன்.. நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?
Nainar Nagendran - JP Nadda: டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “ அக்டோபர் மாதம் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதில் பங்கேற்க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
டெல்லி, செப்டம்பர் 23, 2025: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக ஒன்றிணைந்து போட்டியிட்டபோது, பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற வேண்டும் என முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பாஜக:
இதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாநில பூத் கமிட்டிகள் மாநாடு, மாவட்ட செயலாளர் கூட்டங்கள், எந்தெந்த தொகுதிகள் பாஜக வலுவாக உள்ளது, மேலும் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், 2025 ஏப்ரல் மாதத்தில் உள்துறை அமைச்சர் வருகை தந்தபோது பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, புதிதாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், 2025 அக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் இருந்து நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக பாஜக கூட்டணி:
மேலும், அதிமுக–பாஜக கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்பு இருந்து வருகிறது. அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் விலகுவதாக அறிவித்தனர். இது மேலும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜே.பி நட்டாவை சந்தித்த நயினார் நாகாந்திரன்:
இந்த சூழலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசியுள்ளார். அதிமுக–பாஜக கூட்டணி தொடர்பாகவும், அவர் மேற்கொள்ள உள்ள பரப்புரை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: சென்னையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – டிரைவர் உட்பட 8 பேர் காயம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “அக்டோபர் 12, 2025 முதல் தமிழ்நாட்டில் ‘மக்கள் சந்திப்பு’ எனும் சுற்றுப்பயணத்தை மதுரையில் இருந்து பாஜக தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் அக்டோபர் 6, 2025 அன்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜே.பி. நட்டா சென்னை வருகிறார். எனவே, 12 ஆம் தேதி நடைபெறும் சுற்றுப்பயண துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என தெரிவித்தார்.