தமிழகம் வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.. ஆலோசனைக்கு பின் தேர்தல் தேதி அறிவிக்க திட்டம்?

2026 Assembly Election: நாளை சென்னைக்கு வரும் இந்த குழு, தமிழக தலைமைச் செயலர், மாநில காவல்துறை தலைவர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழகம் வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.. ஆலோசனைக்கு பின் தேர்தல் தேதி அறிவிக்க திட்டம்?

கோப்பு புகைப்படம்

Published: 

25 Feb 2026 07:53 AM

 IST

சென்னை, பிப்ரவரி 25, 2026: தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு பிப்ரவரி 25ஆம் தேதி இன்று சென்னைக்கு வருகை தருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், வரவிருக்கும் ஏப்ரல் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க: ராமதாஸ் தலைமையில் நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

SIR பணிகள்:

இதேவேளை, தேர்தல் ஆணையம் தரப்பிலும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பணிகள் நிறைவடைந்து, பிப்ரவரி 23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும், தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: தீபத்தூண் சர்ச்சை : திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி – விவரம் இதோ

தமிழகம் வரும் தலைமை தேர்தல் அதிகாரி:

ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அடங்கிய குழு அந்த மாநிலத்திற்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு இன்று பிற்பகல் சென்னை வருகிறது.

சென்னைக்கு வந்ததும், அவர்கள் தனி விமானம் மூலம் புதுச்சேரி செல்கின்றனர். அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான நிர்வாக ஏற்பாடுகள், வாக்குச்சாவடி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். அதன் பின்னர், இன்று இரவு அங்கு தங்கி, நாளை மீண்டும் புதுச்சேரியிலிருந்து சென்னை வருகின்றனர்.

சென்னையில் முக்கிய ஆலோசனை:

நாளை சென்னைக்கு வரும் இந்த குழு, தமிழக தலைமைச் செயலர், மாநில காவல்துறை தலைவர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

அதனைத் தொடர்ந்து, வருமானவரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளுடன் பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு எவ்வாறு இருக்க வேண்டும், தேர்தல் நேரத்தில் எந்தெந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், விதிமீறல்கள் எவ்வாறு தடுக்கப்பட வேண்டும் என்பன குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

தேர்தல் பணிகள் தீவிரம்:

மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளும் கேட்கப்பட உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவடைந்த பின், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூனியக்காரி எனக்கூறி பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கிராமத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
இரவில் குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து சத்தமாக கத்துகிறதா? இதுதான் காரணம்
நோயாளிகளின் 9 பேரின் கண்கள் நீக்கம்...பார்வையிழந்த 9 பேர்... உத்தரப்பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
அப்பாவின் பெயர் கட்டாயமில்லை.. சிறுமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு