அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி.. ஒரே வார்த்தையில் ஓபனாக சொன்ன அண்ணாமலை..
Admk TVK Alliance: அதிமுக தவெக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியபோது, “ எல்லோருடைய சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் இருக்கின்றன. தமிழக வெற்றி கழகம் ஒரு லைனில் இருக்கிறது; நாங்கள் ஒரு லைனில் இருக்கிறோம். அது எந்த அளவிற்கு ஒருங்கிணையும் என தெரியவில்லை — பொறுத்திருந்து பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, அக்டோபர் 10, 2025: தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக இரண்டுமே வேறு வேறு சித்தாந்தத்துடன் பயணம் செய்கின்றன. இது கூட்டணியில் எந்த அளவிற்கு ஒத்துப் போகும் என தெரியவில்லை; பொறுத்திருந்து பார்ப்போம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
அதே சமயம், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிற கட்சித் தலைவர்களும் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பரப்புரையும் மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பறந்த த.வெ.க கொடி:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தின் போது திமுகவையும் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அந்தந்த தொகுதியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது என்பது குறித்து பேசிவருகிறார்.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பரப்புரையில் தமிழக வெற்றிக்கழகக் கொடி பறந்தது. இது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்த யூகங்களை தூண்டியுள்ளது.
கூட்டணிக்கான பிள்ளையார் சுழு போட்டாச்சு:
நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி “திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது; கூட்டணி தேவைதான் என்றாலும் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வலுவாக இருக்கும்” என குறிப்பிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் தமிழக வெற்றி கழகக் கொடி பறந்தது.
அப்போது அவர், “இங்கே பாருங்கள், கொடி பறக்குது! பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க! ஸ்டாலின் அவர்களே, குமாரபாளையத்தில் உருவாகியுள்ள இந்த எழுச்சியின் சத்தம் உங்கள் காதை தொலைக்கட்டும்!” என குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னர், அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்கும் என்ற யூகங்கள் வலுத்தன.
மேலும் படிக்க: இருமல் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருந்தது கூட தெரியாத ஒரு அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
அதிமுக – த.வெ.க கூட்டணி டவுட் தான் – அண்ணாமலை:
இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சில கருத்துக்களை தெரிவித்தார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் மரணம் குறித்து இரங்கல் தெரிவிக்க அவர் நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக–தவிகா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “என்னுடைய நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன். எல்லோருடைய சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் இருக்கின்றன. தமிழக வெற்றி கழகம் ஒரு லைனில் இருக்கிறது; நாங்கள் ஒரு லைனில் இருக்கிறோம். அது எந்த அளவிற்கு ஒருங்கிணையும் என தெரியவில்லை — பொறுத்திருந்து பார்ப்போம். 2026 தேர்தலுக்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது; யார் யாருடன் வருவார்கள், காலம் தான் பதில் சொல்லும். தேர்தலுக்கும் கூட்டணிக்கும் இன்னும் நேரம் அதிகமாக உள்ளது,” என குறிப்பிட்டார்.
அண்ணாமலையின் இந்த கருத்து, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே கூட்டணி அமைவது கடினம் என்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ளன என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.