Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இருமல் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருந்தது கூட தெரியாத ஒரு அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

Edappadi Palaniswami: அக்டோபர் 9, 2025 அன்று நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதால் இந்தியாவில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்த மருந்து நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்ததே மாநில சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இருமல் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருந்தது கூட தெரியாத ஒரு அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Oct 2025 06:10 AM IST

நாமக்கல், அக்டோபர் 10, 2025: தமிழ்நாட்டில் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதால், மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், அந்த இருமல் மருந்து நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்ததே மாநில சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை என, எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையின் போது தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த இருமல் மருந்தால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த விசாரணையின் போது ‘கோல்ட் ரிப்’ எனக்கூடிய இருமல் மருந்து, தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் உற்பத்தி செய்தது தெரியவந்தது.

மேலும் படிக்க: 20 குழந்தைகள் பலி.. இருமல் மருந்தை தயாரித்த உரிமையாளர் சென்னையில் கைது!

இருமல் மருந்திற்கு தடை:

இந்த இருமல் மருந்தில் டைஇதிலீன் கிளைகால் (Diethylene Glycol) என்ற ரசாயனம் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த ரசாயனம் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடியது. இதே ரசாயனம் மை மற்றும் பசை போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் வகையிலும் உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதோடு, ஸ்ரீ சன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை, சென்னை காவல்துறை உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். கைதான ரங்கநாதன் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆட்சியை விமர்சிப்பது கிரிமினல் குற்றமா? வழக்கை ரத்து பண்ணுங்க – உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு

இருமல் மருந்து நிறுவனம் இருந்தது கூட தெரியாத அரசு – எடப்பாடி பழனிசாமி:


இருமல் மருந்து அருந்தி 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அக்டோபர் 9, 2025 அன்று நாமக்கல் மாவட்டத்தில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதால் இந்தியாவில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்த மருந்து நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்ததே மாநில சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை. திமுக அரசு மக்கள் மீது எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் ஏழு மாதங்கள்தான் இருக்கிறது. ஏழு மாதத்திற்கு பிறகு அதிமுக ஆட்சி அமைக்கும் — அது சட்டத்தின் ஆட்சியாக இருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.