கூலித்தொழிலாளியின் மகன்.. இன்று எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் – சாதித்தது எப்படி?
மோசமான பொருளாதார சூழலில் வளர்ந்த ஒருவர் இன்றும் பெங்களூருவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் தலைவராக மாறும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். ஐஐடியில் படித்த அவர், தனது நண்பர்களுடன் இணைந்து வாகனம் ஓடும்போதே சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தை கண்டறிந்திருக்கிறார். அவரது வாழ்க்கை சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு முன்னுதாரணம்.

அனில் குமார்
தெலங்கானாவின் (Telangana) நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தும்மலபெண்பாகட் என்ற கிராமத்தில் பிறந்த பிதமர்த்தி அனில் குமார் இன்று பெங்களூருவில் இருந்து இயங்கும் புதிய எலக்ட்ரிக் வாகன (EV) தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 22 வயதான அனில் குமார், ஒரு தினசரி கூலித்தொழிலாளியின் மகனாக இருந்தாலும், தனது கடின உழைப்பால் ஐஐடி காரக்பூரில் பட்டம் பெற்று இன்று ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனராகவும் வளர்ந்துள்ளார். கடந்த ஜூலை 15, 2025 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அனில் குமாரின் குடும்பத்தார் பங்கேற்றது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. அவரது தாயார் பிதமர்த்தி கவிதா, இன்றும் கூலி வேலை செய்கிறார். தந்தை பிதமர்த்தி பிரசாத், கிராம பஞ்சாயத்து அலுவலக உதவியாளராகவும், செய்தித்தாள் விநியோகிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார்.
தற்போது பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ‘Eloop Charging Solution Pvt Ltd’ என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனார் அனில். இவருடன் ஐஐடியில் பயின்ற நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த ஜம்பராப்பு வெஸ்லி, தெலங்கானாவைச் சேர்ந்த நவீன், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ பிஜ் ஆகியோரும் இணைந்து இந்த நிறுவத்தை துவங்கியிருக்கின்றனர்.
இதையும் படிக்க : சுனாமியில் மக்களை காப்பாற்றியவர்.. இன்று 1000 கோடி மதிப்பிலான நிறுவனத்துக்கு அதிபதி – யார் இந்த விஜய் அரிசெட்டி!
நண்பர்களின் புதிய கண்டுபிடிப்பு
நண்பர்கள் நான்கு பேரும் இணைந்து , ‘Loop Charging Module’ (LCM) என்ற புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர். இது சுற்றியுள்ள காற்றின் அழுத்தத்தைப் பயன்படுத்தி நேரடி மின்சாரத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் வாகனம் ஓடும் போதே சார்ஜ் செய்ய முடியும். “இந்த கண்டுபிடிப்பு மூலம், மைலேஜ் சுமார் 70% வரை அதிகரிக்க முடியும். இது எலக்ட்ரிக் வாகன துறையை மாற்றக்கூடிய திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
தங்கள் மகன் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்த பிறகும், அனிலின் பெற்றோர் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டுவிடவில்லை. இதுகுறித்து பேசிய அனில், “என் அம்மா இன்று கூட கூலி வேலைக்கு செல்கிறார். என் அப்பா இன்னும் பஞ்சாயத்து அலுவகத்தை சுத்தம் செய்கிறார். அதுவே அவர்களுடைய வாழ்க்கை. அதுதான் என்னை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. நான் என் வாழ்க்கையில் இந்த நிலையைக் எட்டுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. என்னை நம்பிக்கையுடன் வாழ்த்திய பலரும், நிதி உதவிகளை வழங்கிய சிலரும் என் பயணத்தில் முக்கிய பங்காற்றினர். என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார்.
இதையும் படிக்க: 70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை
எந்த பின்புலமும் இல்லாமல் அனில் மற்றும் அவரது நண்பர்களின் தேடல், கடுமையான முயற்சி மற்றும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றின் மூலம் இன்று தொழில்நுட்ப உலகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியில் மோசமான இடத்தில் இருந்தாலும் நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு அனிலின் வாழ்க்கை மிகப்பெரிய முன்னுதாரணம்.